சினிமா செய்திகள்
கதாநாயகியான திருநங்கை அஞ்சலி

ராம் இயக்கத்தில் மம்முட்டி கதாநாயகனாக நடித்து தமிழ், மலையாளத்தில் தயாராகி உள்ள ‘பேரன்பு’ படத்தில் அஞ்சலி அமீர் என்ற திருநங்கை கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார்.
அஞ்சலி அமீர் கேரளாவை சேர்ந்தவர். மம்முட்டி பரிந்துரையில் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

ஏற்கனவே மோகன்லாலுடன் ஸ்வர்ணபுரு‌ஷன் என்ற மலையாள படத்தில் அஞ்சலி அமீர் நடித்துள்ளார். அந்த படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. பேரன்பு படம் முடிந்து உலக பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது. விரைவில் இந்த படம் திரைக்கு வர உள்ளது.

கதாநாயகியானது குறித்து திருநங்கை அஞ்சலி அமீர் கூறும்போது, ‘‘கேரளாவில் டெலிவி‌ஷன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தேன். அப்போது மம்முட்டி என்னை பார்த்து பேரன்பு படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுத்தார். படப்பிடிப்புக்கு வருவதற்கு முன்பு தமிழ் தெரியாது. இப்போது ஓரளவு கற்றுக் கொண்டு விட்டேன்.

உலக படவிழாக்களில் பேரன்பு படத்தை பார்த்து எழுந்து நின்று கைதட்டினார்கள். அது பெருமையாக இருந்தது. தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பேன்’’ என்றார்.