சினிமா செய்திகள்
தமிழில் வரும் ஹாலிவுட் படம் ‘ஸ்கைஸ்கிராப்பர்’

ஹாலிவுட் நடிகர் ட்வெயின் ஜான்சன் நடித்த ‘ஸ்கைஸ்கிராப்பர்’ படம் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.
‘த ராக்’ என்று வர்ணிக்கப்படும் ஹாலிவுட் நடிகர் ட்வெயின் ஜான்சனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் ஒருவராகவும் இருக்கிறார். இவர் நடித்துள்ள ‘ஸ்கைஸ்கிராப்பர்’ படம் உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் இந்த படம் வெளியாகிறது. 

ராசன் மார்‌ஷல் இயக்கி உள்ளார். ட்வெயின் ஜான்சன் தனது குடும்பத்துடன் சீனாவுக்கு பணி நிமித்தமாக செல்கிறார். அங்குள்ள உயரமான ஒரு கட்டிடத்தை சுற்றிப் பார்த்து பாதுகாப்பை மதிப்பீடு செய்கிறார். அப்போது கட்டிடம் திடீரென்று தகர்க்கப்படுகிறது. அந்த சதிவேலையில் ட்வெயின் ஜான்சனுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீஸ் சந்தேகிப்பதால் அவர்கள் பிடியில் சிக்காமல் தப்புகிறார்.

இதனால் அவரது மனைவியையும், மகளையும் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கின்றனர். தாக்குதலுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து மனைவி, மகளை எப்படி மீட்கிறார் என்பது கதை. அதிரடி சண்டை படமாக தயாராகி உள்ளது. இதில் நேவ் கேம்ப்வெல் சின் ஹான், நோவா டெய்லர் ரோலண்ட் மோலர், பைரோன் மான், பப்லோ ‌ஷரீபர், ஹன்னா ஷின்லிவன் ஆகியோரும் நடித்துள்ளனர்.