சினிமா செய்திகள்
‘‘கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வியந்தேன்’’ பட விழாவில் விக்ரம் பேச்சு

விக்ரம்–கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள படம் ‘சாமி–2. ஹரி இயக்கி உள்ளார். சிபு தமீம் தயாரித்துள்ளார்.
சாமி–2 படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.  விழாவில் நடிகர் விக்ரம் கலந்து கொண்டு பேசியதாவது:–

‘‘எனது சினிமா வாழ்க்கையில் சாமி முக்கிய படமாக அமைந்தது. என்னை வியாபார ரீதியான கதாநாயகனாகவும் நிற்க வைத்தது. காசி, அந்நியன் என்று நான் நடித்துள்ள பல படங்கள் ஒவ்வொரு பிரிவினர் ரசித்து பார்க்கும்படி அமைந்தன. ஆனால் சாமி படத்தை எல்லா தரப்பினரும் விரும்பி பார்த்தார்கள். அதில் கம்பீரம் இருந்தது.

அதன் பிறகுதான் தில், தூள் என்றேல்லாம் படங்கள் வந்தன. நீண்ட இடைவெளிக்கு பிறகு சாமி படம் சாயலில் சாமி–2 படத்தை எடுத்து இருக்கிறோம். இந்த படம் எனக்கு மைல் கல்லாக அமையும். ஹரி படப்பிடிப்பை வேகமாகவும் விறுவிறுப்பாகவும் நடத்தினார். எப்போதும் படத்தை சிறப்பாக எடுக்க வேண்டும் என்ற சிந்தனையில் தவமாகவே வேலை செய்தார்.

இந்த படத்தில் ஒரு பாடலை பாடி இருக்கிறேன். கீர்த்தி சுரேசும் என்னுடன் சேர்ந்து பாடி இருக்கிறார். கீர்த்தி சுரேஷ் என்னுடைய ரசிகை என்று கூறினார். அவர் சிறந்த நடிகை. நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரி வேடத்தில் அற்புதமாக  நடித்து இருந்ததை பார்த்து வியந்தேன். பாரதியார் படத்தில் நடித்த பிறகு சாயாஷி ஷிண்டே பாரதியாராகவே தெரிந்தார். அதுபோல் கீர்த்தி சுரேசும் சாவித்திரியாகவே தெரிகிறார்.

 இந்த இளம் வயதில் இவ்வளவு வலுவான கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது பெரிய வி‌ஷயம். அதுமட்டுமல்ல சாவித்திரி மாதிரியே கீர்த்தி சுரேசுக்கு இசை, நீச்சல் தெரியும். குழந்தைத் தனமாகவும் இருக்கிறார். சாமி–2 படத்தில் எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர். ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக வந்துள்ளது.’’

இவ்வாறு  விக்ரம் பேசினார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் பேசும்போது, ‘‘நான் விக்ரமின் ரசிகை. சாமி–2 படத்தில் அவருடன் நடித்தது பெருமையாக இருக்கிறது’’ என்றார். நடிகர்கள் பிரபு, சூரி, நடிகைகள் சுமித்ரா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் பேசினார்கள்.