சினிமா செய்திகள்
விருது விழாவுக்கு, நடிகைகள் எதிர்ப்பை மீறி மோகன்லாலுக்கு கேரள அரசு அழைப்பு

கேரள மாநில அரசு சார்பில் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா அடுத்த மாதம் நடக்கிறது. இதில் முதல்–மந்திரி பினராய் விஜயன் கலந்து கொண்டு நடிகர்–நடிகைகளுக்கு விருதுகள் வழங்குகிறார்.
 நடிகர் மோகன்லால் சிறப்பு விருந்தினராக இந்த விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது.  இதற்கு நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். திரைப்படத்துறையை சேர்ந்த 105 பேர் கையெழுத்திட்டு முதல் மந்திரிக்கு கடிதம் அனுப்பி மோகன்லாலை விருதுகள் வழங்கும் விழாவுக்கு அழைக்க கூடாது என்று வற்புறுத்தினார்கள். நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய திலீப்பை மலையாள நடிகர் சங்கத்தில் சேர்க்க மோகன்லால் முன்வந்ததால் அவருக்கு எதிராக நடிகைகள் திரண்டு இருக்கிறார்கள்.

இதனாலேயே விருது வழங்கும் விழாவுக்கும் அழைக்க கூடாது என்று போர்க்கொடி தூக்கினர். இதற்கு பதில் அளித்த மோகன்லால் இதுவரை அரசிடம் இருந்து விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ளும்படி எனக்கு அழைப்பு வரவில்லை என்றார்.

இந்த நிலையில் மோகன்லாலுக்கு நேற்று முறைப்படி அரசிடம் இருந்து விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும்படி அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. நடிகைகள் எதிர்ப்பை மீறி மோகன்லாலை அரசு விழாவுக்கு அழைத்து இருப்பது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.