சினிமா செய்திகள்
பெண் குழந்தைகளை வளர்க்க சுஷ்மிதா சென் கற்றுத்தருகிறார்

“நாம் நமது குழந்தைகளுடன் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பது முக்கியமல்ல. அந்த நேரத்தை எப்படி செலவிடுகிறோம் என்பதுதான் முக்கியம்.
“நாம் நமது குழந்தைகளுடன் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பது முக்கியமல்ல. அந்த நேரத்தை எப்படி செலவிடுகிறோம் என்பதுதான் முக்கியம். அதுபோல் என்ன மாதிரியான விஷயங்களை அவர்களுக்கு கற்பிக்கிறோம் என்பதைவிட, அவை எந்த அளவுக்கு அவர்களது வாழ்க்கைக்கு துணையாக இருக்கிறது என்பது முக்கியம். நாம் குழந்தைகளோடு சேர்ந்திருக்கும் நேரத்தை கவனமாக செலவிட்டால், அவர்களிடம் என்ன மாதிரியான திறமைகள் இருக்கின்றன என்பதை தெளிவாக கண்டுபிடித்துவிடலாம். அவர்கள் தங்கள் ஆசைகளை நம்மிடம் தெரிவிக்கவும், அவர்கள் செய்யும் தவறுகளை நாம் திருத்திக்கொள்ளவும் அந்த நேரத்தை பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

பள்ளி விடுமுறை நாட்களில் நான் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வெளிநாடு சென்றுவிடுவேன். அப்போது நானும் அவர் களைப்போல் குழந்தையாக மாறிவிடுவேன். அந்த நேரத்தில் மனதில் இருக்கும் பாரமெல்லாம் இறங்கிப்போய்விடும். குழந்தை களுக்கு நாம் கொடுக்கும் அதிகப்படியான அன்பு மட்டுமல்ல, அடக்குமுறையும் அவர்கள் மனதை பாதிக்கும். அவர்கள் செய்யும் தவறுகளை கண்டுங் காணாமலும் இருப்பதை அன்பு என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. மாறாக அதிரடியாக செயல்பட்டு தண்டிக்கவும்கூடாது. தவறு செய்யும் குழந்தைகளை சிந்திக்கவிட வேண்டும். அன்பை ஆயுதமாக்கி, அவர்கள் செய்யும் தவறுகள் அவர்களாலேயே திருத்தப்படவேண்டும்” என்று நீண்ட விளக்கம் அளிக் கிறார், முன்னாள் உலக அழகி சுஷ்மிதா சென்.

பிரபல நடிகையான இவர், சமீபத்தில் நாட்டிய நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அதில் தனது மகள் அலிஷாவுடன் சேர்ந்து நடனமாடி பார்வையாளர்களின் பாராட்டினை பெற்றார். இவருக்கு திருமணமாகவில்லை. ஆனால் இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து ஆளாக்கியிருக்கிறார். அந்த குழந்தைகளை தனியாக வளர்த்து, குழந்தை வளர்ப்பு அனுபவங்களையும் சிறப்பாக பெற்றிருக்கிறார்.

குழந்தை வளர்ப்பு அனுபவம் பற்றி அவரிடம் சில கேள்விகள்:

உங்கள் குழந்தைகள் இருவரும் தத்தெடுக்கப்பட்டவர்கள் என்ற உண்மை அவர்களுக்குத் தெரியுமா?

குழந்தைகளுக்கு நாம் எப்போதும் நேர்மையானவர்களாகவும், உண்மையானவர்களாகவும் நடந்துகொள்ளவேண்டும். விவரம் தெரியாத குழந்தைகளாக அவர்கள் இருந்தபோது நான் தத்தெடுத் தேன். பிறகு ஒருநாள் பக்குவமாக, தத்தெடுத்ததை தெரிவித்துவிட்டேன். இது மூடி மறைக்கும் விஷயம் அல்ல. நான் சொல்லாவிட்டால் அவர்கள் வேறு வழியில் தெரிந்துகொள்வார்கள். அது நிலைமையை சிக்கலாக்கிவிடும். அது அவர்கள் மனதில் காயத்தை ஏற்படு்த்திவிட்டால் குணமடைய வெகுகாலமாகும். நாம் யாரோ.. வளர்க்கும் தாய் யாரோ.. என்ற எண்ணம் மூளையில் தங்கிவிடும். பின்பு அது பல சந்தர்ப்பங்களில் அவ்வப்போது வெளிப்படும்.

ஒருமுறை என் மகள் என்னிடம் அப்பாவின் பெயர் என்ன என்று கேட்டாள். அதோ அந்த ஈஸ்வரன் தான் உன் அப்பா என்று கூறினேன். அவர் தான் இந்த உலகத்தில் எல்லோருக்கும் அப்பா. உனக்கும் அவர் தான் அப்பா என்றேன். உங்கள் இருவரையும் நான் என் குழந்தைகளாக ஏற்றுக்கொண்டேன். அதேபோல நீங்களும் என்னை அம்மாவாக ஏற்றுக்கொள்வீர்களா? என்று கேட்டேன். இருவரும் சரி என்றார்கள். அவ்வளவுதான் இதற்கு மேல் எதுவும் யோசிக்காதீர்கள் என்றேன். இன்றுவரை எங்களுக்குள் எந்த பேதமும் இல்லை. நானும் மனதளவில் நிம்மதியாக உணர்கிறேன்.

பெண் குழந்தைகளை பாதுகாப்பது சிரமமான விஷயமா?

அது கொஞ்சம் சவாலான விஷயம்தான். நம்மோடு இருக்கும் வரை பாதுகாப்பாக இருப்பார்கள். வெளியே போகும்போது பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. அதற்காக நாம் எடுத்துக்கொள்ளும் அதிகப்படியான கண்காணிப்பு அவர்களுக்கு தொந்தரவாக கூட இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு கொஞ்சம் சமூகத்தை சந்திக்க பயிற்சியளிக்க வேண்டும். வெளியுலக செய்திகள் தெரிந்திருக்க வேண்டும். அவர்களை அவர்களே பாதுகாத்துக்கொள்ள கற்றுத் தர வேண்டும். அதுதான் சிறப்பான விஷயம். பெண் குழந்தைகளுக்கு எல்லா வகையிலும் விழிப்புணர்வு தேவை.

குழந்தைகள் உங்கள் பேச்சை கேட்டு நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

அது ஒரு பொதுவான எதிர்பார்ப்பு. பல விஷயங்களில் என் விருப்பப்படி நடந்தாலும் அவர்கள் வளரவளர இந்த நிலை மாற வேண்டும். குழந்தைகள் என் சொற்படி தான் நடப்பார்கள் என்று சொல்லுவதை கேட்க நன்றாக இருந்தாலும் அது முழுக்க முழுக்க சரியான விஷய மல்ல. அவர்கள் யோசித்து முடிவெடுக்க வேண்டும். அதுவே அவர்கள் அறிவு வளர்ச்சிக்கு சான்று. அவர்கள் சிந்தித்து முடிவெடுக்கும்போது அவர்கள் மீது அவர்களுக்கே நம்பிக்கை ஏற்படும். குழந்தைகள் நம் வார்த்தையை மதிக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்ப்பார்கள். அதில் அவர்களது பெருமை அடங்கி யிருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால் அது சரியல்ல. என் மூத்த மகள் இப்போது என்னைவிட்டு தனியாக ஹாஸ்டலில் தங்கி படிக்கிறாள். அவளுக்கு எல்லா சந்தர்ப்பங்களிலும் தனியாக சிந்தித்து முடிவெடுக்கும் திறமை உள்ளதால் நான் நிம்மதியாக இருக்கிறேன். நமது பிள்ளைகள் ஒவ்வொன்றிற்கும் நம்மை தேடிக்கொண்டிருக்கக்கூடாது.

உங்கள் அனுபவங்களை அவா்களுக்கு சொல்லிக்கொடுப்பீர்களா?

சொல்லுவேன். ஆனால் அது அவர்களுக்கு பாடமாக இருக்காது. அவரவருக்கு ஏற்படும் அனுபவங்கள்தான் அவரவருக்கு பாடமாக அமையும். மனிதருக்கு மனிதர் அனுபவங்கள் மாறுபடும். அதை அவர்கள் கடந்து வரும் விதமும் மாறுபடும்.

சமூகத்தைப் பற்றி என்ன கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள்?

சமூகம் என்பது நம்முடைய பிரதி பலிப்பு தான். எல்லோரிடமும் மரியாதையாக நடக்க கற்றுத்தந்திருக்கிறேன். நான் செல்லும் இடங்களுக்கு அவர்களையும் அழைத்துச் செல்வேன். மற்றவர்களோடு பழக கற்றுக்கொடுப்பேன். அழகு என்பது நம் பழக்க வழக்கத்திலும் உள்ளது. நம்மைச் சுற்றி இருக்கும் எல்லோரும் நம்மை கவனித்துக்கொண்டிருப்பார்கள் என்ற உணர்வு எப்போதும் வேண்டும். மற்றவர்களுக்கு மத்தியில் நாம் பேசும் வார்த்தைகளில் மிகுந்த கவனம் இருக்கவேண்டும். எவ்வளவு கோபம் வந்தாலும் கடுமையான வார்த்தைகளை பேசக்கூடாது. அது நம் தரத்தை குறைத்துவிடும் என்றும் கூறியிருக்கிறேன். அவர்களுடைய நடவடிக்கையில் என் மரியாதையும் அடங்கி இருக்கிறது என்பது அவர்களுக்கு தெரியும்.

குழந்தைகள் அறிவை வளர்க்கும் இடம் எது?

இந்த சமூகம் தான். இதிலிருந்து தான் புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். யாரும் யாருக்கும் அறிவை புகட்ட முடியாது. ஒருவர் விருப்பப்பட்டு ஒரு விஷயத்தை தெரிந்துகொள்ள விரும்பினால் மட்டுமே அந்த அறிவை பெற முடியும்.

(இவர் தத்து பெண்குழந்தைகளை வளர்க்கும் விதம் பலருக்கும் பாடமாக இருக்கிறது)