சினிமா செய்திகள்
‘சிவா மனசில புஷ்பா’ படத்துக்கு தணிக்கை குழு மீண்டும் தடை

வாராகி இயக்கத்தில் ‘சிவா மனசில புஷ்பா’ என்ற பெயரில் புதிய அரசியல் படம் தயாராகி உள்ளது.
வாராகி இயக்கத்தில் ‘சிவா மனசில புஷ்பா’ என்ற பெயரில் புதிய அரசியல் படம் தயாராகி உள்ளது. புதுமுகங்கள் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து கடந்த மாதம் தணிக்கைக்கு அனுப்பினர். படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் 20–க்கும் அதிகமான இடங்களில் சர்ச்சை காட்சிகள் இருப்பதாகவும் அவற்றை நீக்க வேண்டும் என்றும் கூறினர்.

படத்தின் தலைப்பையும் மாற்ற வேண்டும் என்றார்கள். இதனை படக்குழுவினர் ஏற்கவில்லை. இதனால் படத்தை வெளியிட தணிக்கை குழுவினர் அனுமதி மறுத்தனர். இதைத் தொடர்ந்து மேல் முறையீட்டு குழுவுக்கு படத்தை அனுப்பினர். நடிகை கவுதமி உள்ளிட்ட மேல் முறையீட்டு குழுவினர் படத்தை பார்த்து சிவா, புஷ்பா என்ற கதாபாத்திரங்கள் பெயரையும் படத்தின் தலைப்பையும் மாற்ற வேண்டும் என்று கூறினர்.

படத்தின் தலைப்பை மாற்ற இயக்குனர் வாராகி சம்மதிக்காததால் மீண்டும் படத்தை வெளியிட அனுமதி கிடைக்கவில்லை. இதுகுறித்து டைரக்டர் வாராகி கூறும்போது, ‘‘சிவா மனசில புஷ்பா படத்துக்கு கவுதமி தலைமையிலான மேல்முறையிட்டு குழுவினர் அனுமதி மறுத்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அதிக செலவு செய்து படத்தை எடுத்துள்ளோம். தனிப்பட்ட நபர்கள் யாரையும் படத்தில் அவதூறு செய்யவில்லை. தலைப்பை மாற்றமாட்டோம். டெல்லியில் உள்ள தணிக்கை குழுவுக்கு படத்தை அனுப்பி வைப்போம் அங்கும் அனுமதி கிடைக்காவிட்டால் கோர்ட்டுக்கு செல்வோம்’’ என்றார்.