சினிமா செய்திகள்
நடிகை ரூபா கங்குலி மீது தாக்குதல்

இந்தி நடிகை ரூபா கங்குலி. டெலிவிஷன் தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர். இவர் தனது மகனை பள்ளியில் விடுவதற்காக காரில் அழைத்துச் சென்றார்.
மும்பை வெர்சோவா பகுதியில் உள்ள சிக்னலில் காரை அவர் நிறுத்தினார். அப்போது பின் இருக்கையில் இருந்த மகன் அவரது செல்போனை எடுக்க முயற்சித்துள்ளான்.

அதற்கு உதவியபோது தவறுதலாக காலை பிரேக்கில் இருந்து எடுத்து விட்டார். இதனால் கார் பின்னால் சென்று ஒரு பைக் மீது லேசாக உரசி விட்டது. பைக்கில் வந்த இரண்டு பேர் கோபத்தோடு இறங்கி வந்து ரூபா கங்குலியை கேவலமாக திட்டி, கார் கண்ணாடியை உடைத்தனர். அவரை தாக்கவும் செய்தார்கள்.

இதில் ரூபா கங்குலிக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. பின்னர் பைக்கில் ஏறி அவர்கள் சென்று விட்டனர். இதுகுறித்து மும்பை போலீசில் ரூபா கங்குலி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்து தாக்கிய இருவரையும் கைது செய்தனர்.

இதுகுறித்து ரூபா கங்குலி கூறும்போது “எனது மகன் முன்னால் காரை உடைத்து என்னை தாக்கினார்கள். அப்போது சுற்றி நின்ற யாரும் உதவிக்கு வரவில்லை. தாக்குதலில் காயமடைந்து ரத்தம் சிந்திய நிலையிலும் என்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முயற்சிக்கவில்லை. இது வேதனை அளிப்பதாக இருந்தது” என்றார்.