சினிமா செய்திகள்
10 ஆண்டு சினிமா அனுபவம் பற்றி தமன்னா

தமன்னா ‘கண்ணே கலைமானே’ தமிழ் படத்தில் நடிக்கிறார். இந்தி, தெலுங்கு படங்களும் கைவசம் உள்ளன. 10 வருட சினிமா அனுபவம் பற்றி அவர் கூறியதாவது.
“சிறுவயதில் இருந்தே நடிகையாவது எனது கனவாக இருந்தது. நடிக்க வந்த புதிதில் தோல்வி படங்களில் நடித்துள்ளேன். அப்போது இந்த அளவுக்கு உயர்வேன் என்று நினைக்கவில்லை. இப்போது 10 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டேன். இவ்வளவு காலம் சினிமாவில் நிலைத்து இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

உங்கள் வெற்றி ரகசியம் என்ன? என்று கேட்கிறார்கள். அனுபவங்கள்தான் வெற்றிக்கு காரணம். இத்தனை ஆண்டுகளில் நிறைய வெற்றி தோல்விகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் பார்த்து விட்டேன். பணம், பெயர், புகழுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வேலையை மட்டும் செய்து விட்டுப்போனால் பலன் நம் பின்னாலேயே வரும்.

எதிர்மறை எண்ணங்களை வைத்துக்கொள்ள மாட்டேன். கஷ்டமான வேலைகளை சவாலாக எடுத்துச் செய்வேன். தோல்வியை சந்தித்தால்தான் வெற்றியின் அருமை தெரியும். நாளைய பற்றிய பயம் எனக்கு கிடையாது. வாழும் ஒவ்வொரு கணத்திலும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எதிர்மறை எண்ணங்களை நெருங்க விடாமல் இருப்பது முக்கியம். சினிமாதுறை தினமும் புதிது புதிதாக தோன்றுகிறது. ஒவ்வொரு படத்திலும் அனுபவங்கள் கிடைக்கிறது. எதிர்காலத்திலும் சினிமா இல்லாமல் என்னால் இருக்க முடியாது. நடிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் சினிமாவை சார்ந்த ஏதாவது ஒரு தொழிலில்தான் இருப்பேன்.” இவ்வாறு தமன்னா கூறினார்.