சினிமா செய்திகள்
பெண் டைரக்டர் மாரடைப்பால் மரணம்

பிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
என்.டி.ராமராவ் மகனும், பிரபல நடிகருமான ஹரிகிருஷ்ணா 2 தினங்களுக்கு முன்பு கார் விபத்தில் மரணமடைந்ததால் தெலுங்கு பட உலகினர் கவலையில் இருக்கும் நிலையில் பிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா திடீரென்று மரணம் அடைந்துள்ள தகவல் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ஜெயா தனது கணவர் ராஜுவுடன் ஐதராபாத்தில் வசித்து வந்தார். அவருக்கு நேற்று முன்தினம் நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி ஜெயா உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 54. 

ஜெயா சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படித்து பட்டம் பெற்றவர். பாலா தித்யா, சுஹாசினி நடித்த சாந்திகடு படத்தை இயக்கி டைரக்டராக அறிமுகமானார். இந்த படம் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது. பிரேமிகுலு, குந்தம்மா காரு மானவாடு, சவல், லவ்லி, வைசாகம் ஆகிய படங்களையும் இயக்கி உள்ளார். சிறுகதை எழுத்தாளராகவும் இருந்தார்.