செல்போன்கள் தவறாக சித்தரிப்பு; 2.0 திரைப்படத்தினை மறுதணிக்கை செய்ய கோரி மனு

2.0 திரைப்படத்தில் செல்போன்கள் குறித்து தவறாக சித்தரித்திருப்பதால் படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2018-11-27 15:47 GMT
சென்னை,

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் படம் ‘2.0’.  ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகி இருக்கிறது.

இதுவரை இந்திய படங்களில் இல்லாத அளவுக்கு கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டும் கிட்டத்தட்ட 543 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 

இந்த படத்தின் டிரைலர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் கடந்த 3ந்தேதி வெளியானது.  டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், அக்சய் குமார், இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகை எமி ஜாக்சன் பங்கேற்றிருந்தனர்.

திரைப்படத்தின் டிரெய்லர் இணையதளம் மற்றும் திரையரங்குகளில் வெளியாகியது.

இந்த நிலையில், இந்த படத்தின் டிரெய்லரில், செல்போன்கள் குறித்து தவறாக காட்சிகள் சித்தரிக்கப்பட்டு உள்ளன என இந்திய செல்போன் ஆப்ரேட்டர்கள் சங்கம் குற்றச்சாட்டு எழுப்பியது.

இதனை தொடர்ந்து 2.0 திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழை மறு ஆய்வு செய்ய கோரி மத்திய தணிக்கை மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்திடம் இந்த சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.  இதனால் படம் வெளியாவதற்கு 2 நாட்களே உள்ள நிலையில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்