இணையதளங்களில் ‘மாரி-2’ படத்தை வெளியிட தடை

மாரி-2 படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.

Update: 2018-12-20 23:30 GMT
தமிழ் பட உலகில் திருட்டு வி.சி.டி. பெரிய தலைவலியாக இருந்து வருகிறது. இப்போது புதிய படங்கள் திருட்டுத்தனமாக இணையதளங்களிலும் உடனுக்குடன் வெளியாகி தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து வருகின்றன. ரஜினிகாந்தின் கபாலி, காலா, 2.0., விஜய்யின் மெர்சல், சர்கார், விஷாலின் சண்டக்கோழி-2 உள்பட முன்னணி நடிகர்கள் படங்கள் அனைத்தும் தியேட்டரில் ரிலீசான சில மணிநேரத்திலேயே இணையதளங்களிலும் வந்தன.

இவற்றை தடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தியேட்டர்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல், செல்போனில் படம் எடுப்பதை தடுத்தல் போன்ற நடவடிக்கைகள் எடுத்தும் கட்டுப்படுத்த முடியவில்லை.

தனுஷ்-சாய்பல்லவி நடித்துள்ள மாரி-2 படம் இன்று திரைக்கு வருகிறது. இந்த படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கும்படி தனுசின் வுண்டர்பார் பட நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர், மாரி-2 படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார். 16 ஆயிரத்து 135 இணையதளங்களில் இந்த படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மாரி-2 படம் கடந்த 2015-ல் வெளியான மாரி படத்தின் 2-ம் பாகமாக தயாராகி உள்ளது. பாலாஜி மோகன் இயக்கி உள்ளார். வரலட்சுமி, டோவினோ தாமஸ், வித்யா பிரதீப் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

மேலும் செய்திகள்