சிம்பு வழக்கை சட்டப்படி சந்திப்பேன் –பட அதிபர் மைக்கேல் ராயப்பன்

சிம்பு வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்று பட அதிபர் மைக்கேல் ராயப்பன் கூறியுள்ளார்.

Update: 2019-01-09 22:45 GMT
மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்து அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படம் திரைக்கு வந்தது. இந்த படத்தில் சிம்புவால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், எனவே அவரிடம் இருந்து நஷ்ட ஈடு வாங்கி தரும்படியும் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார்.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் விஷால் விசாரித்து வந்தார். இந்த நிலையில் விஷால் மற்றும் மைக்கேல் ராயப்பன் மீது சிம்பு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். மைக்கேல் ராயப்பன் தனக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு உள்ளார். இந்த வழக்கில் விஷாலுக்கும், மைக்கேல் ராயப்பனுக்கும் நோட்டீஸ் அனுப்ப கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு குறித்து மைக்கேல் ராயப்பனிடன் கேட்டபோது அவர் கூறியதாவது:–

‘‘சிம்புவை வைத்து அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படம் எடுத்ததால் எனக்கு ரூ.20 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது. இதனால் பொருளாதாரத்தில் பெரிய பின்னடைவை சந்தித்தேன். மன உளைச்சலும், அவமானமும் ஏற்பட்டது. இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தேன். பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர் என்ற முறையில் சில உண்மைகளையும் வெளியிட்டேன். பட அதிபர் சங்கம் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தது. இந்த நிலையில் அதை திசை திருப்பும் முயற்சியாக சிம்பு கோர்ட்டுக்கு சென்றுள்ளார். அவர் என்மீது தொடர்ந்துள்ள வழக்கை சட்டப்படி சந்திப்பேன்.’’

இவ்வாறு மைக்கேல் ராயப்பன் கூறினார்.

மேலும் செய்திகள்