சமூக வலைத்தளத்தில் அவதூறு ரசிகர்களுக்கு லாரன்ஸ் வேண்டுகோள்

நடிகர் லாரன்ஸ் சமீபத்தில் தனது கட் அவுட்டுக்கு கிரேனில் தொங்கி பால் அபிஷேகம் செய்த ரசிகர்களை கண்டித்து குடும்பத்தினருக்கு உதவியாக இருங்கள் என்று ஆலோசனை தெரிவித்தார்.

Update: 2019-04-28 23:28 GMT
சமூக வலைத்தளங்களில் தனக்கு எதிராக சிலர் அவதூறுகள் பரப்பி வருவதாகவும் கண்டித்தார். திருநங்கைகள் அவருக்கு ஆதரவாக திரண்டு சமூக வலைத்தள அவதூறுகளுக்கு கண்டனம் தெரிவித்தனர். போலீசிலும் புகார் அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன.

இதைத்தொடர்ந்து நடிகர் லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“காஞ்சனா-3 படத்தை வெற்றிப்படமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி. என் மீது அன்பு வைத்துள்ளவர்களுக்கு வேண்டுகோள். எனது சேவைகள் பற்றியும், என்னை பற்றியும் அவதூறு பேசுபவர்கள் பற்றி கவலைப்படாதீர்கள். என் மீது அக்கறை உள்ள சில மாற்றுத்திறனாளிகளும், திருநங்கைகளும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்டவர் மீது புகார் அளிப்பதாக கேள்விப்பட்டேன்.

அப்படி எதுவும் செய்யாதீர்கள். பொறுமையை கடைபிடியுங்கள். நாம் நமது வழியில் நல்லதை மட்டும் நினைப்போம். நல்லதையே செய்வோம். எனக்கு ஒரு சின்ன பிரச்சினை என்றால் உடனே ஓடி வருகிற உங்கள் ஒவ்வொருவருக்கும் என் குடும்பத்தார் சார்பில் நன்றி. நான் மும்பையில் காஞ்சனா இந்தி படப்பிடிப்பில் இருக்கிறேன்.

படப்பிடிப்பு முடிந்து வந்தவுடன் ஒரு நல்ல முடிவு எடுப்போம். அதுவரை அமைதி காப்போம். கடவுள் நமக்கான நல்லதை செய்வார்”

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

மும்பையில் இந்தி காஞ்சனாவில் நடிக்கும் அக்‌ஷய்குமாரை லாரன்ஸ் சந்தித்து பேசினார்.

மேலும் செய்திகள்