தமிழ் படங்களுக்கு தேசிய விருது வழங்காமல் புறக்கணிப்பு - பாரதிராஜா கண்டனம்

தமிழ் படங்களுக்கு தேசிய விருது வழங்காமல் புறக்கணித்து விட்டதாக பாரதிராஜா கண்டனம் தெரிவித்தார்.

Update: 2019-08-15 00:11 GMT
சென்னை, 

ஜி.வி.பிரகாஷ்-மகிமா ஜோடியாக நடித்துள்ள படம் ‘ஐங்கரன்’. ரவி அரசு டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

இதில் டைரக்டர் வசந்த பாலன் கலந்து கொண்டு பேசியதாவது:-

“இயக்குனர் பாரதிராஜா தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவராக வருவார் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில் அவருக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். தேசிய விருது தேர்வு குழுவுக்கு தமிழகத்தில் இருந்து அனுப்பப்படுபவர்களை நாம் சிபாரிசு செய்ய முடியுமா? என்று ஆலோசிக்க வேண்டும். தவறானவர்கள் செல்வதால் தமிழ் படங்களுக்கு தேசிய விருதுகள் கிடைக்காமல் போகின்றன. இது துரதிர்ஷ்டவசமானது. இந்த பிரச்சினையில் ஒரு நல்ல தீர்வை உருவாக்க வேண்டும்.”

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் டைரக்டர் பாரதிராஜா பேசியதாவது:-

“தேசிய விருதுகள் தமிழ் படங்களுக்கு கிடைக்காதது குறித்து இயக்குனர் வசந்தபாலன் பிரச்சினையை கிளப்பினார். அது நியாயமான வேதனை. தமிழ் பட உலகில் தரமான இயக்குனர்கள் அதிகம் வந்துள்ளனர். தரமான படங்களும் நிறைய வந்துள்ளன. தமிழ் படங்களுக்கு ஏன் விருது கிடைக்கவில்லை என்பதற்கான அடிப்படையான காரணங்கள் உள்ளது.

நான் கூட அந்த குழுவில் இருந்து தகராறு செய்து இருக்கிறேன். நமக்குள்ள சூழ்நிலை சரியில்லை. திறவுகோல் போட்டு திறக்க வேண்டும். இல்லாவிட்டால் உடைக்க வேண்டும். தமிழ் திரைப்பட வர்த்தக சபை என்று இருந்தால்தான் தேசிய விருதுக்கு தமிழ் படங்களை அனுப்ப முடியும். இதை பலவருடங்களாக சொல்லி விட்டேன்.

யார் யாரோ உட்கார்ந்து அவர்களுக்கு வேண்டியவர்களை அனுப்புகின்றனர். 12 விருது கேரளாவுக்கும், 13 விருது ஆந்திராவுக்கும் கிடைத்துள்ளன. கர்நாடகாவுக்கும் அதிக விருதுகள் கிடைத்துள்ளன. ஆனால் தமிழ் நாட்டுக்கு ஒரு விருது கொடுத்துள்ளனர். தமிழில் மேற்கு தொடர்ச்சி மலை, பரியேறும் பெருமாள் உள்பட நிறைய தரமான படங்கள் வந்தும் விருதுக்கு தேர்வு செய்யாதது வருத்தம் அளிக்கிறது.”

இவ்வாறு பாரதிராஜா பேசினார்.

மேலும் செய்திகள்