தியேட்டர்கள் குறைவாக இருப்பதால் 400 படங்கள் திரைக்கு வராமல் முடக்கம் - சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம்

‘தேடு’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் நாயகனாக சஞ்சய், நாயகியாக மேக்னா நடித்துள்ளனர். சுசி ஈஸ்வர் இயக்கி உள்ளார். சிவகாசி முருகேசன் தயாரித்துள்ளார். படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

Update: 2019-10-18 00:00 GMT
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:-

“சிறுபட்ஜெட் படங்கள் நன்றாக ஓடினால்தான் தியேட்டர் அதிபர்களுக்கு லாபம் கிடைக்கும். தேடு படத்தையும் சிறப்பாக எடுத்துள்ளனர். இந்த படமும் வெற்றிபெறும் என்று நம்புகிறேன். தியேட்டர் அதிபர்கள் சிறிய படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்குவது இல்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.

1980-ல் தமிழத்தின் மக்கள் தொகை 2 கோடிக்கும் குறைவாக இருந்தபோது வருடத்துக்கு 80 படங்கள் வந்தன. அப்போது தமிழகத்தில் 2,800 தியேட்டர்கள் இருந்தன. இப்போது மக்கள் தொகை 8 கோடியை தாண்டி விட்டது. வருடத்துக்கு 250 படங்கள் வருகின்றன. ஆனால் இருக்கிற திரையரங்குகள் 960. இந்த நிலையில் எல்லா படங்களுக்கும் எப்படி திரையரங்குகள் கிடைக்கும்?.

வாரத்துக்கு 8,9 படங்களை வெளியிடுகிறீர்கள். இருக்கிற தியேட்டர்களைத்தானே கொடுக்க முடியும். பெரிய தியேட்டர்களை சிறிய திரையரங்குகளாக மாற்ற அனுமதி கேட்டு அரசிடம் போராடுகிறோம். தியேட்டர் அதிபர்களை குறை கூறாமல் திரையரங்குகள் எண்ணிக்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்க வேண்டும்.

400 படங்கள் திரைக்கு வர தயாராக இருந்தும் தியேட்டர் கிடைக்காததால் திரையிட முடியாமல் இருக்கின்றன. தியேட்டர்கள் எண்ணிக்கை உயர வேண்டும். அப்போதுதான் சிறிய படங்களுக்கு தியேட்டர்கள் கிடைக்கும்.’‘

இவ்வாறு பன்னீர் செல்வம் பேசினார். விழாவில் இயக்குனர்கள் பாக்யராஜ், பேரரசு உள்ளிட்ட பலர் பேசினார்கள்.

மேலும் செய்திகள்