படப்பிடிப்பை தொடங்குவது எப்போது? இந்தியன்-2 படத்துக்கு தொடரும் சிக்கல்கள்

இந்தியன்-2 படப்பிடிப்பை கிரேன் சரிந்து 3 பேர் இறந்த விபத்தினால் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.

Update: 2020-03-08 23:45 GMT
இந்த படம் ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சைகள் தொடர்கின்றன. முதலில் படத்தை தில்ராஜு தயாரிப்பதாக இருந்தது. பின்னர் லைக்கா கைக்கு மாறியது. படத்துக்கு ரவிவர்மன் ஒளிப் பதிவு செய்வதாக அறிவித்தனர். பின்னர் அவர் விலகியதால் ரத்னவேலு ஒளிப்பதிவு செய்தார்.

படப்பிடிப்பை தொடங்கிய சில நாட்களிலேயே கமல்ஹாசனின் வயதான தோற்றம் பொருத்தமாக இல்லை என்று தடங்கல் ஏற்பட்டது. அதன்பிறகு தோற்றத்தை மாற்றி மீண்டும் படப்பிடிப்பை தொடங்கினர். கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை நடந்ததால் படப்பிடிப்பு மீண்டும் தடைபட்டது.

சில மாதங்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்த நிலையில் பிப்ரவரி 19-ந்தேதி கிரேன் சரிந்து 3 பேர் இறந்தனர். 9 பேருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. விபத்து தொடர்பாக கமல்ஹாசனுக்கும், பட நிறுவனத்துக்கும் கடிதம் மோதல் ஏற்பட்டு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியன்-2 படத்துக்கு நடிகர்-நடிகைகள் கொடுத்த தேதிகள் முடிந்து வேறு படங்களில் நடிக்க போய் விட்டனர். மீண்டும் அவர்களிடம் புதிதாக தேதிகள் வாங்க வேண்டி உள்ளது. இந்த பிரச்சினைகளால் படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்ற பரபரப்பு நிலவுகிறது.

மேலும் செய்திகள்