வெளிநாட்டில் சிக்கிய பிரித்விராஜ் கடத்தப்பட்டதாக தாய் அச்சம்

பிரித்விராஜ், ‘ஆடு ஜீவிதம்’ என்ற மலையாள படப்பிடிப்புக்காக ஜோர்டான் சென்று, கொரோனா ஊரடங்கால் நாடு திரும்ப முடியாமல் தவிக்கிறார்.

Update: 2020-05-12 04:49 GMT
சென்னை,

தமிழில் மொழி, கனா கண்டேன், சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மலையாள நடிகரான பிரித்விராஜ், ‘ஆடு ஜீவிதம்’ என்ற மலையாள படப்பிடிப்புக்காக ஜோர்டான் சென்று, கொரோனா ஊரடங்கால் நாடு திரும்ப முடியாமல் தவிக்கிறார். அவரை மீட்டு வரும்படி திரையுலகினர் விடுத்த கோரிக்கையை கேரள அரசு நிராகரித்து விட்டது. பாலைவன பகுதியில் நல்ல உணவு கிடைக்காமல் தவித்து வருவதாக பிரித்விராஜ் தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் பிரித்விராஜ் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அவரது தாய் மல்லிகா சுகுமாரன் கவலை தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங் கால் திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டில் வசித்து வரும் மல்லிகா சுகுமாரன் இதுபற்றி கூறியதாவது:-

“எனது மகன் பிரித்விராஜை யாரோ கடத்தி விட்டார்களோ என்று பயந்தேன். தனியாக இருக்கும் போதெல்லாம் இந்த பயம் வருகிறது. எனது மகன் சம்பந்தமான உண்மை தகவல்களை மற்றவர்கள் எனக்கு தெரியப்படுத்தாமல் மறைக்கிறார்களோ என்ற சந்தேகமும் ஏற்பட்டது. நடிகர் மோகன்லாலிடம் எனது பயம் பற்றி சொன்னேன். அவர் எனக்கு ஆறுதல் சொன்னார். சுரேஷ் கோபியிடமும் பேசினேன். இருவரும் ஜோர்டான் நிலவரத்தை என்னிடம் சொன்னார்கள். மத்திய மந்திரி முரளிதரன், ஜோர்டானில் இந்திய தூதரகத்தில் வேலை பார்க்கும் அதிகாரி ஆகியோரும் பயப்பட வேண்டாம் என்று என்னிடம் தெரிவித்தனர்”.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்