கிருஷ்ணராக அமீர்கான் ரூ.1000 கோடி செலவில் படமாகும் மகாபாரதம்

இந்தியில் மகாபாரதம் கதையை படமாக எடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வெளியிடும் முயறிசியில் அமீர்கான் ஏற்கனவே ஈடுபட்டு உள்ளார்.

Update: 2020-06-16 00:38 GMT
இதற்கான பணிகள் கொரோனா ஊரடங்கில் தற்போது தீவிரம் அடைந்துள்ளது. நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வில் அவர் ஈடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. திரைக்கதையை உருவாக்கும் பொறுப்பை விஜயேந்திர பிரசாத்திடம் ஒப்படைத்து இருக்கிறார்.

இவர் பாகுபலி படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்கள், மகதீரா, இந்தியில் வெற்றி பெற்ற பஜ்ரங்கி பாய்ஜான், மணிகர்னிகா ஆகிய படங்களுக்கு திரைக்கதை எழுதி உள்ளார். ஜெயலலிதா வாழ்க்கை படமான தலைவி படத்துக்கும் கதை எழுதி உள்ளார். இவர் பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமவுலியின் தந்தை ஆவார்.

மகாபாரதம் படத்துக்கான கதையை உருவாக்கும் பணியில் ஈடுபட இருப்பதாக விஜயேந்திர பிரசாத் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “அமீர்கானும் நானும் மகாபாரதத்தை படமாக்குவது தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறோம். விரைவில் கதையை உருவாக்குவதற்கான பணியில் இருவரும் ஈடுபடுவோம். வேறு தகவல்களை இப்போது சொல்ல முடியாது“ என்றார்.

மகாபாரதம் படம் ரூ.1000 கோடி செலவில் 2 பாகங்களாக தயாராகும் என்று தெரிகிறது. இதில் கிருஷ்ணர் வேடத்தில் அமீர்கானும் அர்ஜூனன் வேடத்தில் பிரபாசும் திரவுபதி வேடத்தில் தீபிகா படுகோனேவும் நடிப்பதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்