எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலை: வீடியோவில் அழுத பாரதிராஜா

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் நிலை குறித்து வீடியோவில் பேசியுள்ளார் இயக்குனர் பாரதிராஜா.

Update: 2020-08-19 01:26 GMT
கொரோனா பாதிப்பினால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய திரையுலகினர் பலர் வீடியோவில் உருக்கமாக பேசி வருகிறார்கள். டைரக்டர் பாரதிராஜா நேற்று வெளியிட்ட வீடியோவில், “எனது நண்பன் பாலு. ஆயிரம் நிலவே வா பாடி உச்சத்துக்கு உயர்ந்தார். எனக்கு பல உதவிகள் செய்துள்ளாய். 16 வயதினிலே படத்தில் தொண்டை சரியில்லாததால் செவ்வந்தி பூமுடிச்ச சின்னாத்தா பாடலை நீ பாட முடியாமல் போனது. அதன்பிறகு பாடிய இது ஒரு பொன்மாலை பொழுது பாடலை கேட்டு உலகமே வியந்தது. வைரமுத்து அன்றுதான் உதிக்கிறார். பாலு நீ வந்து விடுவாய். மறுபடியும் வந்து ஆயிரக்கணக்கான பாடல்களை பாடுவாய்” என்று பேசி கதறி அழுதார்.

நடிகர் சிவகுமார் வெளியிட்ட வீடியோவில், “உலமே கொண்டாடும் ஒப்பற்ற பாடகன் நீங்கள். நூற்றுக்கும் மேலான படங்களில் எனக்காக டூயட் பாடி இருக்கிறீர்கள். முதன் முதல் எனக்கு மூன்று தெய்வங்கள் படத்தில் முள்ளில்லா ரோஜா முத்தாரம் பொன்னூஞ்சல் கண்டேன் பாடலையும் சிட்டுக்குருவியில் என்கண்மணி பாடலையும் எனது 100-வது படத்துக்கு பாடிய மாமன் ஒரு நாள் மல்லிகைப்பூ கொடுத்தான் பாடலையும் மறக்க முடியாது. உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வைச்ச கிளி பச்சை மலை பக்கத்துல மேயுதுன்னு சொன்னாங்க பாடலில் நீகொடுத்த உணர்ச்சிக்கு 45 நாட்கள் காடு மலை வெயில் என்று நடித்தேன். வாழ்க்கையில் எத்தனையோ சவால்களை சந்தித்தவர் நீங்கள். கொரோனாவும் ஒரு சவால்தான். விரைவில் குணமடைந்து வெளியே வாருங்கள்” என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்