சினிமா விமர்சனம்: காரி

Update: 2022-11-26 06:32 GMT

சென்னையில் குதிரைகளுக்கு பயிற்சி அளித்து பந்தயத்துக்கு ஆயத்தப்படுத்தும் 'ஆடுகளம்' நரேன் மகன் சசிகுமார், குதிரை பந்தய வீரர்.

ஒரு போட்டியில் நரேன் வளர்த்த குதிரை தோல்வி அடைகிறது. அதனால் குதிரையின் முதலாளி அதை கொன்று விடுகிறார். குதிரையின் தோல்விக்கு சசிகுமார்தான் காரணம் என்பதை அறியும் நரேன் கவலையில் இறந்துவிடுகிறார்.

சசிகுமாரின் பூர்வீக கிராமத்தில் வறண்ட ஏரி இடத்தை குப்பை கிடங்காக மாற்ற ஒரு தனியார் நிறுவனம் அரசிடம் ஒப்புதல் பெறுகிறது.

அதே கிராமத்தில் ஊர் கவுரவத்தை காக்க ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கி ஜெயிக்க வேண்டிய நிர்ப்பந்தம் வருகிறது.

மறுபக்கம் போட்டியில் வெற்றி பெறும் காளைகளை விலைக்கு வாங்கி மாமிசத்துக்காக கார்ப்பரேட் முதலாளி பயன்படுத்துகிறார்.

இந்த மும்முனை தாக்குதலால் பாதிக்கப்படும் ஊர் மக்களை காப்பாற்றும் ஆபத்பாந்தவனாக வருகிறார் சசிகுமார். மனிதர்களையும், மண்ணையும் எப்படி பாதுகாக்கிறார் என்பதை விறுவிறு திரைக்கதையில் சொல்லியுள்ளார்கள்.

இதுபோன்ற மண்சார்ந்த கதையில் சசிகுமார் நடித்து எத்தனை நாளாகிவிட்டது என்று சொல்லும் அளவுக்கு சேது கதாபாத்திரத்தில் ஆதிக்கம் செலுத்தும் சசிகுமாரின் நடிப்பு அசத்தல் ரகம். அப்பாவிடம் உரிமையாக கோபம் கொள்ளும் காட்சி, காதலியிடம் அலுங்கி, சிணுங்கி மனதை பறிகொடுக்கும் காட்சி, வில்லனிடம் ரவுத்ரம் பழகுவது என வீசும் அத்தனை அம்புகளையும் இயல்பான நடிப்பு மூலம் ஊதி தள்ளுகிறார்.

வறண்ட முள் கிராமத்தில் ஒரு தேவதையாக மனதை அள்ளுகிறார் பார்வதி அருண். முட்புதர்களில் சிக்கி தவிக்கும் அறிமுக காட்சியில் நான் டூயட் பாடுவதற்காக வந்து போகும் ரகம் இல்லை என்று அடித்து சொல்கிறார். தம்பிபோல் வளர்த்த மாட்டை தந்தை விற்றதை பார்த்து ஆவேசமாக அழுது புரண்டு நடிப்பின் உச்சம் தொடுகிறார்.

ஸ்டைல் வில்லனாக மிரட்டுகிறார் ஜே.டி.சக்கரவர்த்தி.

ஊர் பெரியவராக வரும் நாகிநீடு, நாயகியின் அப்பாவாக வரும் பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், ரெடின் கிங்ஸ்லி, அம்மு அபிராமி என அனைவரும் கதாபாத்திரங்களில் நிறைவான நடிப்பை கொடுத்துள்ளனர்.

இசையமைப்பாளர் இமான் பின்னணி இசை நேர்த்தி.

வானம் பார்த்த பூமியையும் கவித்துவமாக காண்பித்துள்ளார் ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா. இரு ஊர்க்காரர்களின் மோதலை இன்னும் விறுவிறுப்பாக்கி இருக்கலாம். நண்பனை தவறானவனாக சித்தரிக்க வைத்துள்ள காட்சி நெருடல்.

இயக்குனர் ஹேமந்த் ஜல்லிக்கட்டை பின்புலமாக வைத்து சமூக பொறுப்புடன் கதை சொல்லி இருப்பதை பாராட்டலாம்.

Tags:    

மேலும் செய்திகள்