'அரசியலில் அவர் கண்டிப்பாக ஜெயித்து காட்டுவார்' - விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி பேட்டி

விஜய்யை தொடர்ந்து நடிகர் விஷால் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக தகவல் பரவின.

Update: 2024-02-09 07:15 GMT

சென்னை,

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை சமீபத்தில் தொடங்கினார். விஜய்யை தொடர்ந்து நடிகர் விஷால் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக தகவல் பரவின. தனது ரசிகர் மன்றத்தை 'விஷால் மக்கள் நல இயக்கம்' என்று பெயர் மாற்றம் செய்து அனைத்து மாவட்டங்களிலும் பொறுப்பாளர்களை விஷால் நியமித்து உள்ளார். பூத் கமிட்டிகளையும் உருவாக்கி இருக்கிறார். இவை நடிகர் விஷால் அரசியல் கட்சி தொடங்க உள்ளார் என்ற தகவலை மேலும் உறுதிபடுத்தின.

இதற்கிடையே நடிகர் விஷால் வெளியிட்ட அறிக்கையில், 'மக்கள் நல இயக்கத்தின் மூலம் நான் செய்து வரும் மக்கள் பணிகளை தொடர்ந்து செய்வேன். வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால் அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்கமாட்டேன்' என தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் விஷாலின் தந்தையும், தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி, விஷாலின் அரசியல் வருகை குறித்து தனது கருத்தை தெரிவித்து உள்ளார். சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், 'விஷாலுக்கு சிறுவயதில் இருந்தே ஏழைகளுக்கு உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது. தன்னிடம் பணம் இல்லை என்றாலும் கடன் வாங்கி கூட மற்றவர்களுக்கு உதவி செய்வார்.

தற்போது தனது தாயார் தேவியின் பெயரில் அறக்கட்டளை தொடங்கி ஏழை மாணவ, மாணவிகளுக்கு உதவி செய்து வருகிறார். அவரது ரசிகர் மன்றத்தை அரசியல் இயக்கமாக மாற்றும் எண்ணத்தில் இருக்கிறார். கண்டிப்பாக விஷால் அரசியலுக்கு வருவார். அவர் அரசியலில் ஜெயித்து காட்டுவார்.

அதேசமயம் அரசியலுக்கு வருவதற்கு முன்பு விஜய், அஜித், சூர்யா போன்று நிறைய சம்பாதிக்க வேண்டும். திருமணம் செய்து செட்டில் ஆக வேண்டும். அதன்பிறகு, சம்பாதித்த பணத்தை வைத்து அரசியலுக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். இதுதான் என்னுடைய ஆசை' என தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்