'ஜெய்பீம் படத்துக்கு விருது கொடுக்காததற்கு ஏதேனும் காரணம் உள்ளதா?' - பி.சி.ஸ்ரீராம் ட்வீட்

‘இந்தியா’வின் குரல் அவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா? என பி.சி.ஸ்ரீராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2023-08-25 17:12 GMT

சென்னை,

இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்கள் மற்றும் திரைத்துறை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 2021-ஆம் ஆண்டுகான 69-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

இதன்படி பி.லெனின் இயக்கிய 'சிற்பிகளின் சிற்பங்கள்' சிறந்த கல்வி திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது. தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருதை 'காஷ்மீர் பைல்ஸ்' வென்றுள்ளது. சிறந்த தமிழ்படமாக மணிகண்டன் இயக்கிய 'கடைசி விவசாயி' படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 'கடைசி விவசாயி' படத்தில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

'கருவறை' ஆவணப்படத்திற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பார்த்திபன் இயக்கிய 'இரவின் நிழல்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'மாயவா தூயவா' பாடலை பாடிய ஸ்ரேயா கோஷல் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை வென்றுள்ளார்.

இந்த நிலையில் 'ஜெய்பீம்' படத்துக்கு தேசிய விருது அறிவிக்கப்படாததற்கு ஏதேனும் காரணம் உள்ளதா? என ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பி.சி.ஸ்ரீராம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "தேசிய விருது வென்றவர்களுக்காக திரைத்துறையைச் சேர்ந்த அனைவரும் மகிழ்ச்சி கொள்கிறோம். 'ஜெய்பீம்' படத்துக்கு விருது கொடுக்காததற்கு ஏதேனும் காரணம் உள்ளதா? அல்லது 'இந்தியா'வின் குரல் அவர்களுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா?" என கேள்வி எழுப்பியுள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்