'உலகம் முழுவதும் சனாதன தர்மத்தின் கொடி பறக்க வேண்டும்' - கங்கனா ரணாவத்

கடவுள் கிருஷ்ணரின் ஆசிர்வாதம் இருந்தால் தேர்தலில் போட்டியிடுவேன் என நடிகை கங்கனா தெரிவித்துள்ளார்.

Update: 2023-11-04 08:52 GMT

Image Credits: Twitter.com/@KanganaTeam

காந்திநகர்,

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பின்னர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்க்கை வரலாறாக உருவாகி வெளியான 'தலைவி' படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் தமிழில் வெளியான 'சந்திரமுகி 2' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனை தொடர்ந்து இந்தியில் இவர் நடிப்பில் 'தேஜஸ்' என்ற திரைப்படம் கடந்த 27-ஆம் தேதி வெளியானது. சர்வேஷ் மேவாரா இயக்கிய இந்தப் படத்தில் கங்கனா விமானப்படை அதிகாரியாக நடித்துள்ளார். இந்த படம் வெளியான முதலே மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது.

ரூ.60 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் வெறும் ரூ.5 கோடி மட்டுமே வசூலித்து மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. சில திரையரங்குகளில் குறைவான மக்களே படம் பார்க்க வருவதால் பல காட்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் நடிகை கங்கனா சமீபத்தில் துவாரகா கோவிலுக்கு சென்றிருந்தார். கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு செய்தியாளர் 'நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா..?' என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த அவர், 'கடவுள் கிருஷ்ணரின் ஆசிர்வாதம் இருந்தால் தேர்தலில் நான் போட்டியிடுவேன். மத்திய பா.ஜ.க. அரசின் முயற்சிகளால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்தியர்களாகிய நாம் 600 ஆண்டுகால போராட்டத்தின் வெற்றியை பார்க்க போகிறோம். உலகம் முழுவதும் சனாதன தர்மத்தின் கொடியை பறக்க செய்ய வேண்டும்' என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்