உதயநிதியின் ‘கண்ணே கலைமானே’ குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் படம்

“உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ள ‘கண்ணே கலைமானே,’ குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் படமாக தயாராகி இருக்கிறது” என்று படத்தின் டைரக்டர் சீனுராமசாமி கூறுகிறார்.

Update: 2019-01-31 11:20 GMT
கூடல் நகர், தென்மேற்கு பருவகாற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், இவர். ‘கண்ணே கலைமானே’ படத்தை பற்றி கூறியதாவது:-

‘இது, ஒரு வாழ்வியல் திரைப்படம். ஒரு வாழ்க்கையை சுவாரஸ்யமாக பதிவு செய்திருக்கிறோம். இதில், சோழவந்தானில் வசிக்கும் இயற்கை உர உற்பத்தியாளர் கமலகண்ணனாக உதயநிதி ஸ்டாலின் நடித்து இருக்கிறார். எளிமையான கிராமத்து மனிதராக அவர் வருகிறார். வங்கி அதிகாரியாக தமன்னா நடித்துள்ளார். இவருடைய கதாபாத்திரம், பெண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது. வடிவுக்கரசி, ‘பூ’ ராம் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.

கவிஞர் வைரமுத்து பாடல்களை எழுத, யுவன்சங்கர்ராஜா இசையமைத்து இருக்கிறார். பாடல்கள் சிறப்பாக வந்திருக்கிறது. ஒரே கட்டமாக 42 நாட்களில் படப் பிடிப்பை நடத்தி முடித்து இருக்கிறோம். எல்லா தரப்பினரும் பார்க்கும் வகையில் படத்துக்கு தணிக்கை குழுவினர், ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். படம், அடுத்த மாதம் (பிப்ரவரி) திரைக்கு வரும்.”

மேலும் செய்திகள்