மீண்டும் முதல்-அமைச்சராக மம்முட்டி

மீண்டும் ஒரு திரைப்படத்தில் முதல்-அமைச்சராக மம்முட்டி நடிக்க இருக்கிறார்.

Update: 2019-11-15 09:01 GMT
குஞ்சக்கோ போபன், ரீமா கல்லிங்கல் ஆகியோரது நடிப்பில் 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘சிறகொடிந்த கினாவுகள்.’ இந்தப் படத்தை இயக்கிய சந்தோஷ் விஸ்வநாத், அடுத்ததாக மம்முட்டியை வைத்து அரசியல் நிகழ்வை மையப்படுத்தி ஒரு படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திற்கு ‘ஒன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியான சில நாட்களில் மரியாதை நிமித்தமாக கேரளா முதல்- அமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்தார், மம்முட்டி. இதனால் சந்தோஷ் விஸ்வநாத் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பது, பினராயி விஜயனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் என்று பலரும் நினைத்தனர்.

வரலாற்று கதைகள், புராணக்கதைகளை படமாக்குவது ஒருபுறம் இருந்தாலும், சமீப காலமாக அரசியல் மற்றும் பொதுவாழ்க்கையில் இருப்பவர்களின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கும் வழக்கம் அதிகரித்து வருவதும், இதுபோன்ற ஒரு சந்தேகத்திற்கு வழிவகுத்து விட்டது. ஆனால் இது தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கை வரலாற்றைச் சார்ந்தது இல்லை. இது அரசியல் படமாக இருந்தாலும், வேறு ஒரு கோணத்தில் இந்தக் கதை சொல்லப்பட்டுள்ளதாம். மம்முட்டியோடு, கதாசிரியரும், நடிகருமான முரளி கோபி, ஜோஜூ ஜார்ஜ், சீனிவாசன், ரெஞ்சி பணிக்கர் உள்ளிட்டவர்களும் இருக்கிறார்கள். இந்தப் படத்தில் கடக்கால் சந்திரன் என்ற கதாபாத்திரத்தில் முதல்-அமைச்சராக மம்முட்டி நடிக்க இருக்கிறார். ஏற்கனவே ‘யாத்ரா’ என்ற திரைப்படத்தில் ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டி கதாபாத்திரத்தில் முதல்-அமைச்சராக மம்முட்டி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்