சொந்த பட தயாரிப்பில் அமலாபால் அனுபவங்கள் ‘எனக்கு சாதகமாகவே அமைந்தது’

கேரள மண்வாசனையுடன் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகி வெற்றி பெற்ற நடிகைகளில் அமலாபாலும் ஒருவர்.

Update: 2021-01-16 22:30 GMT
‘வீரசேகரன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். அடுத்து, ‘சிந்து சமவெளி’ படத்தில் சர்ச்சைக்குரிய ஒரு கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்தார். மாமனாரிடம் கள்ள உறவு வைத்திருக்கும் மருமகளாக நடித்து பரபரப்பாக பேசப்பட்டார்.

அவருக்கு மூன்றாவது படமாக, ‘மைனா’ அமைந்தது. அந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததுடன், வசூல் சாதனையையும் புரிந்தது. ‘மைனா’வின் வெற்றி அமலாபாலுக்கு மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

அதன்பிறகு அவர் விஜய் உள்ளிட்ட நட்சத்திர நாயகர்களுடன் ஜோடியாக நடித்து, முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.

இதையடுத்து அவர் சொந்த பட தயாரிப்பில் ஈடுபட்டார். ‘கடாவர்’ என்ற படத்தை தயாரித்து கதாநாயகியாகவும் நடித்தார். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. தற்போது எடிட்டிங், டப்பிங், பின்னணி இசை சேர்ப்பு பணிகள் நடைபெறுகின்றன. படம் திரைக்கு வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சொந்த பட தயாரிப்பு பற்றி அவர் கூறுகையில், ‘‘நான் சொந்தமாக படம் தயாரிக்க முன்வந்தபோது, நிறைய பேர் பயமுறுத்தினார்கள். அவர்கள் பயமுறுத்தியது போல் எதுவும் நடக்கவில்லை. சொந்த பட தயாரிப்பு எனக்கு சாதகமாகவே அமைந்தது’’ என்றார்.

இந்த படத்தை அடுத்து அமலாபால் ஒரு இந்தி படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார். இந்தி படத்தை ஜியோ ஸ்டூடியோஸ், விசேஷ் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.

மேலும் செய்திகள்