மர்மங்கள் நிறைந்த திகில் படம்: திட்டம் இரண்டு (பிளான் பி) - விமர்சனம்

காணாமல் போன சூர்யா என்ன ஆனார், அவரை ஆதிரா கண்டுபிடித்தாரா, அவருடைய காதல் என்ன ஆகிறது, திருமணம் நடந்ததா திட்டம் இரண்டு (பிளான் பி) படத்தின் விமர்சனம் பார்க்கலாம்.;

Update:2021-08-01 00:22 IST
ஆதிராவும், சூர்யாவும் சின்ன வயதில் இருந்தே தோழிகள். இருவரும் வளர்ந்து பெரியவர்கள் ஆன நிலையில், ஆதிரா சென்னையில் போலீஸ் அதிகாரியாகி விடுகிறார். சூர்யா, டாக்டர் கிசோரை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துகிறார். இந்த சூழ்நிலையில், சூர்யா திடீரென்று காணாமல் போகிறார். இதுபற்றி ஆதிரா பல கோணங்களில் விசாரணை நடத்துகிறார். இதற்கிடையில், ஒரு பஸ் பயணத்தில் அவருக்கும், அர்ஜுன் என்ற இளைஞருக்கும் காதல் ஏற்படுகிறது. அவர்களின் காதலை பெற்றோர் ஏற்றுக்கொண்டு இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். நிச்சயதார்த்தமும் நடக்கிறது.

காணாமல் போன சூர்யா என்ன ஆனார், அவரை ஆதிரா கண்டுபிடித்தாரா, அவருடைய காதல் என்ன ஆகிறது, திருமணம் நடந்ததா? என்ற கேள்விகளுக்கு பதில், படத்தின் பின்பகுதியில் இருக்கிறது.

ஆதிராவாக ஐஸ்வர்யா ராஜேஷ், போலீஸ் அதிகாரி வேடத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார். பல இடங்களில் அவருடைய பெரிய கண்களே பேசியிருக்கின்றன. அவருடைய தோழியாக வரும் அனன்யா ராம்பிரசாத்தும் பொருத்தமான தேர்வு. ஆதிராவின் காதலராக வரும் சுபாஷ் செல்வம் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார்.

மர்ம படங்களின் உயிரே பின்னணி இசையில் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு இசையமைத்து இருக்கிறார், சதீஷ் ரகுநாதன். கோகுல் பினாயின் ஒளிப்பதிவு, காட்சிகளுக்கு பதற்றம் கூட்டுகிறது.

திருப்பங்களுக்கு மேல் திருப்பங்களுடன் கதை சொல்லியிருக்கிறார், டைரக்டர் விக்னேஷ் கார்த்திக். இடைவேளை வரை திரைக்கதை வேகமாக பயணிக்கிறது. இடைவேளைக்குப்பின், வேகக்குறைவு. கடைசி காட்சி புதுமைதான் என்றாலும் முன்கூட்டியே யூகிக்க முடிகிறது.

மேலும் செய்திகள்