தன்னந்தனியே உலகை சுற்றிய சாரா

தான் பயணிக்க தீர்மானித்து இருந்த அனைத்து நாடுகளிலும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்வதற்காக ஒரு செயற்கைக்கோள் தொலைபேசி மற்றும் வானொலியை மட்டும் வைத்திருந்தார்.

Update: 2022-05-09 05:30 GMT
‘நீங்கள் முயற்சி செய்து பார்க்காவிட்டால், உங்களால் எவ்வளவு உயரம் செல்ல முடியும் என்பதை தெரிந்துகொள்ள முடியாது’ என்கிறார் சாரா. ‘இந்த உலகத்தை தன்னந்தனியாக சுற்றிய முதல் இளம் பெண்’ என்ற சாதனையை படைத்த சாரா ரதர்போர்ட், பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர். கணித பொறியியல் படித்து வருகிறார்.

இவரது தாயும், தந்தையும் விமானிகள். தனது 14 வயதில் விமானத்தை தனியாக ஓட்டுவதற்குப் பழகினார். சிறுவயதில் இருந்தே விண்வெளி வீராங்கனை ஆக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். அதன் முதல் படியாக, ‘உலகத்தை தனியாக சுற்றி வர வேண்டும்’ என்ற தனது ஆசையை தந்தையிடம் தெரிவித்தார். அவரின் துணையோடு தெளிவாக திட்டமிட்டார்.

முதற்கட்டமாக, பல்வேறு தேசிய வான்வெளிகளுக்குள் விமானத்தில் பறப்பதற்கு தேவையான அனுமதியை முன்கூட்டியே பெற்றனர். கிட்டத்தட்ட 5 கண்டத்தை சுற்றிவர 41 நாடுகளை கடக்க வேண்டும். இது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. பாதுகாப்பாக எந்த விமானமும் பின் தொடராமல், தனியாகவே செல்வதற்கு முடிவு செய்தார். 

தான் பயணிக்க தீர்மானித்து இருந்த அனைத்து நாடுகளிலும், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்வதற்காக ஒரு செயற்கைக்கோள் தொலைபேசி மற்றும் வானொலியை மட்டும் வைத்திருந்தார். பின்பு 325 கிலோ எடை கொண்ட யூ.எல் சிங்கிள் புரொப்பல்லர் விமானத்தை ஒப்பந்தத்தின் கீழ் பெற்று 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பெல்ஜியம் விமான நிலையத்தில் இருந்து பயணத்தைத் தொடங்கினார். 

பயணத்தின் போது ரஷியா மற்றும் சைபீரியாவின் நிலப்பரப்பை கடந்த பொழுது வானிலை மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் கீழே இருந்துள்ளது. மேகமூட்டம் அதிகமாக இருந்ததால் விமானத்தைச் செலுத்துவது மிகவும் சவாலாக இருந்திருக்கிறது. எதிரில் இருப்பது மலைகளா அல்லது மேகமா என்று தெரியாமல், அபாயகரமான பயணத்தையும் மேற்கொள்ள வேண்டி இருந்தது. பல நாடுகளின் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி ஓய்வெடுத்து, விமானத்தில் எரிபொருள் நிரப்பிச் செல்ல வேண்டி இருந்தது.

சாரா தனது பயணத்தில் ஆபத்துகளைத் தாண்டி சில அழகான இடங்களையும் பார்த்திருக்கிறார். சவுதி அரேபிய பாலைவனம், வடக்கு அலாஸ்காவின் தரிசுத்தன்மை, கலிபோர்னியாவில் உள்ள பெரிய  ஆப்பிள் பூங்கா என்று அழைக்கப்படும் எல்லியோயே எனும் தீவு ஆகியவற்றை கடக்கும் பொழுது மிகவும் உற்சாகமாக உணர்ந்ததாக சொல்கிறார். 

150 நாட்கள் கடந்த பிறகு பெல்ஜியத்தில் உள்ள கோர்ட்ரிஜ்க் விமான நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் தரையிறங்கினார். இதன் மூலம் உலகத்தை தனியாக சுற்றி வந்த இளம் பெண் விமானி மற்றும் சிறிய விமானத்தில் பயணித்த விமானி என்ற இரண்டு கின்னஸ் சாதனையை படைத்தார்.

உலகெங்கிலும் உள்ள விமானிகளில் 5.1 சதவீதம் மட்டுமே பெண்கள் இருக்கிறார்கள். எனது இந்த பயணம் நிறைய பெண்களை விமானத் துறையில் ஈடுபட ஊக்குவிக்கவும், ஆர்வத்தை தூண்டவும் உதவும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் சாரா. 

மேலும் செய்திகள்