ஐபிஎல் விதிமுறைகளை மீறிய கேஎல் ராகுல்- மீண்டும் அபராதம் விதிப்பு..!!

விதிமுறைகளை மீறியதாக கூறி கே.எல் ராகுலுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-04-20 14:14 GMT
Image Courtesy : BCCI / IPL
மும்பை,

ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி மும்பை மற்றும் புனேயில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 31-வது லீக் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்-டுபெலிசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 181 ரங்கள் குவித்தது. 182 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.

நேற்றைய போட்டியில் ஐபிஎல் போட்டியின் விதிமுறைகளை மீறியதாக லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு போட்டிக் கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

என்ன விதிமீறலுக்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது என தகவல் வெளிவரவில்லை. எனினும் தவறை கே.எல்.ராகுலே ஒப்புக்கொண்டுள்ளதாகவும், லெவல் 1 விதிப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக கேஎல் ராகுலுக்கு கடந்த போட்டியின் போது அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அவரை தொடர்ந்து லக்னோ அணியின் ஸ்டாய்னிஸ்-க்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்," நவி மும்பையில் உள்ள டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியின் போது ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸைச் சேர்ந்த மார்கஸ் ஸ்டோனிஸிற்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

ஸ்டோனிஸ் ஐபிஎல் நடத்தை விதிகளின் லெவல் 1 குற்றத்தை ஒப்புக்கொண்டார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய போட்டியில் முக்கியமான தருணத்தில் லக்னோ அணியின் ஸ்டாய்னிஸ் ஹேசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் . இவர் அட்டமிழக்கும் முன் முந்தைய  பந்தை ஹேசில்வுட் வைட்டாக வீசினார். 

ஆனால் களநடுவர் அதற்கு வைட் கொடுக்கவில்லை. பேட்ஸ்மேன் ஸ்டோய்னிஸ் நகர்ந்துவிட்டதாக கூறி சரியான பந்து என அறிவித்தார் . இதனால் ஸ்டாய்னிஸ் நடுவர்களை நோக்கி ஆக்கிரோஷமாக கத்தினார். இதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் செய்திகள்