2வது டி20 போட்டி; ஹேலி மேத்யூஸ் அபாரம்...பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹேலி மேத்யூஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Update: 2024-04-28 23:04 GMT

Image Courtesy: @ICC

கராச்சி,

வெஸ்ட் இண்டீஸ் பெண்கள் கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் முனீபா அலி 55 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹேலி மேத்யூஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 122 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 124 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஹேலி மேத்யூஸ் 58 ரன்கள் எடுத்தார்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என வெஸ்ட் இண்டீஸ் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்