வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருந்தது...இருப்பினும்... - கம்மின்ஸ் பேட்டி

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை அபார வெற்றி பெற்றது.

Update: 2024-04-29 09:59 GMT

image courtesy: PTI

சென்னை,

ரசிகர்களை மகிழ்வித்து வரும் 17-வது ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 212 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கெய்க்வாட் 98 ரன்களும், டேரில் மிட்செல் 52 ரன்களும் குவித்தனர். இதனையடுத்து மெகா இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத், சென்னை அணியின் அபார பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 134 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் சென்னை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக தேஷ்பாண்டே 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற தோல்வி குறித்து பேசிய சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில் : டாஸ் வென்று 2-வது பேட்டிங்கை தேர்வு செய்தது பற்றியெல்லாம் நான் பெரிதாக யோசிக்கவில்லை. ஏனெனில் இந்த போட்டியிலும் எங்களுக்கு வெற்றி பெற நல்ல வாய்ப்பிருந்தது. இருப்பினும் சி.எஸ்.கே அணியின் வீரர்கள் நன்றாக விளையாடி 210 ரன்களுக்கு மேல் குவித்து விட்டனர்.

எங்களுடைய பேட்டிங் ஆர்டரை வைத்து பார்க்கும்போது இது எட்டக்கூடிய இலக்குதான். எங்கள் அணியில் உள்ள பேட்ஸ்மேன்கள் அனைவருமே தனித்தனியாக ஒவ்வொரு போட்டியில் வெற்றியை பெற்றுத்தந்துள்ளனர். இந்த போட்டியில் பனிப்பொழிவு சற்று அதிகமாக இருந்தது. முதல் இன்னிங்சின்போதும் பனிப்பொழிவு இருந்தது. இந்த தோல்வியில் இருந்து நிச்சயம் எங்களால் பலமாக மீண்டு வர முடியும். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்