கவுண்டி கிரிக்கெட் : இரட்டை சதத்தை தொடர்ந்து புஜாரா மீண்டும் சதம் அடித்து அபாரம்..!!

சசெக்ஸ் அணிக்காக தனது 2-வது சதத்தை புஜாரா பதிவு செய்தார்.

Update: 2022-04-24 11:19 GMT
Image Courtesy : Twitter @@SussexCCC
லண்டன்,

இந்திய அணியின் சீனியர் வீரரான புஜாரா 2012 ஆம் ஆண்டு முதல் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வந்தார். குறிப்பாக முன்னாள் இந்திய ஜாம்பவான் ராகுல் டிராவிட் உடன் இவரை ஒப்பிட்டு பேசும் அளவிற்கு இவர் இங்கிலாந்து , ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடி சாதனை படைத்தவர்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இவர் இந்திய அணிக்காக பெரிய அளவில் ரன்கள் குவிக்காததால் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கப்பட்டார். ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடி திறமையை நிரூபித்தால் மட்டுமே மீண்டும் இடம் கிடைக்கும் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில் அவர் இங்கிலாந்து நாட்டின் பிரபல உள்நாட்டு தொடரான கவுண்டி கிரிக்கெட்டில் சசெக்ஸ்  அணிக்காக விளையாட ஒப்பந்தமானார். சசெக்ஸ்  அணியின் முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஏப்ரல் 14-17 தேதிகளில் நடைபெற்றது. 

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இங்கிலாந்து மைதானத்தில் புஜாரா முதல் போட்டியிலேயே அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்து போட்டியை டிராவாக்கினார்.

இந்த நிலையில் வொர்செஸ்டர்ஷைர் அணிக்கு எதிரான போட்டியில் தனி ஆளாக நின்று புஜாரா அபாரமாக விளையாடி சதம் அடித்துள்ளார். அவர் 14 பவுண்டரிகளுடன் 184 பந்துகளில் சசெக்ஸ் அணிக்காக தனது 2-வது சதத்தை பதிவு செய்தார்.

இருப்பினும் சக அணி வீரர்கள் சோபிக்காத காரணத்தால் வொர்செஸ்டர்ஷைர் அணி இன்னிங்ஸ் மற்றும் 34 ரன்கள் வித்தியாசத்தில் சசெக்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

கடந்த போட்டியில் இரட்டை சதம் , தற்போது சதம் என கவுண்டி கிரிக்கெட்டில்  புஜாரா அசத்தி வருவது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் செய்திகள்