நடப்பு ஐபிஎல்-லில் மும்பைக்கு எதிராக கேஎல் ராகுல் 2-வது சதம் : லக்னோ அணி 168 ரன்கள் குவிப்பு
சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் 61 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.;
மும்பை,
ஐபிஎல் 15வது சீசன் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 37-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
நடப்பு சீசனின் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை அணி முதன் முதலாக களமிறங்குகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக கேப்டன் ராகுல் மற்றும் டி காக் களமிறங்கினர். பும்ரா பந்துவீச்சில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து டி காக் 9 ரன்களில் வெளியேறினார். பின்னர் மனிஷ் பாண்டே களம் புகுந்தார். அவர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் ராகுல் அரைசதம் கடந்தார். பொல்லார்ட் பந்தில் 22 ரன்களில் அவுட்டாகி அவர் மீண்டும் ஒருமுறை லக்னோ ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய ஸ்டோனிஸ் மற்றும் குருனால் பாண்டியா வந்த வேகத்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
அதை தொடர்ந்து தீபக் ஹூடா-வும் 10 ரன்களில் நடையைக் கட்ட மறுமுனையில் ராகுல் தொடர்ந்து அதிரடி காட்டினார். சிறப்பாக விளையாடிய அவர் 61 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். நடப்பு ஐபிஎல் தொடரில் இது மும்பைக்கு எதிராக அவரது 2-வது சதமாகும்.
இறுதியில் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது. இதை தொடர்ந்து ரன்கள் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்குகிறது.