தேர்வு சரியாக எழுதாததால் பெற்றோருக்கு பயந்து மும்பைக்கு ரெயில் ஏறி வந்த 2 சிறுமிகள் மீட்பு

தேர்வு சரியாக எழுதாததால் பெற்றோருக்கு பயந்து வார்தாவில் இருந்து மும்பைக்கு ரெயில் ஏறி வந்த 2 சிறுமிகளை போலீசார் மீட்டனர்.

Update: 2018-10-02 22:11 GMT
மும்பை,

வார்தா மாவட்டம் சுவாங்கி பகுதியை சேர்ந்த 2 சிறுமிகள் கடந்த 29-ந் தேதி முதல் காணாமல் போய் விட்டனர். இதனால் சிறுமிகளின் பெற்றோர் போலீசில் புகார் அளித்து இருந்தனர். இந்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், சிறுமிகள் மும்பைக்கு ரெயில் ஏறி சென்றது தெரியவந்தது. இதையடுத்து வார்தாவில் இருந்து போலீஸ் குழுவினர் மும்பை வந்து இறங்கினர்.

அவர்கள், மும்பை குற்றப்பிரிவு போலீசாரின் உதவியுடன் சிறுமிகளை குர்லா, ஜூகு போன்ற இடங்களில் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதில் செம்பூர் மாகுல் பகுதியில் 2 சிறுமிகள் சுற்றித்திரிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அங்கு சென்று அந்த சிறுமிகளை மீட்டு விசாரணை நடத்தினர்.

இதில் பள்ளியில் தேர்வை சரியாக எழுதாத காரணத்தினால் பெற்றோருக்கு பயந்து மும்பைக்கு தப்பி ஓடி வந்ததாக தெரிவித்தனர். சிறுமிகளை மீட்ட சம்பவம் குறித்து, போலீசார் பெற்றோருக்கு தெரியப்படுத்தினர்.

பின்னர் சிறுமிகளை வார்தாவுக்கு வரவழைத்து அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்