திருமருகல் பகுதியில் திடீர் மழை நெல் மூட்டைகள் நனைந்ததால் விவசாயிகள் கவலை

திருமருகல் பகுதியில் திடீரென பெய்த மழையால் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தநெல் மூட்டைகள் நனைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2019-02-04 23:00 GMT
திருமருகல்,

திருமருகல் ஒன்றியத்தில் சம்பா நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களை விவசாயிகள் கடன் பெற்று காப்பாற்றி வந்தனர். இதனால் சம்பா மகசூல் குறைந்த அளவு கிடைத்து வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அரசு நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்து நெல்லை தரையில் கொட்டியும், நெல் மூட்டைகளை அடுக்கி வைத்து 10 நாட்கள் வரை காத்திருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருமருகல் பகுதியில் திருமருகல், சீயாத்தமங்கை, கட்டுமாவடி, ஆதினக்குடி, குருவாடி, அண்ணாமண்டபம், போலகம், திருப்புகலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை திடீரென மழை பெய்தது.

இந்த மழை அரை மணி நேரம் நீடித்தது. இதனால் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மழையில் இருந்து நெல்லை பாதுகாக்க அனைத்து விவசாயிகளுக்கும் அரசு இலவசமாக தார்பாய் வழங்க வேண்டும் எனவும், கொள்முதல் செய்யும் நெல்லுக்கு கால தாமதமின்றி பணம் பட்டுவாடா செய்ய வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்