கொலை மிரட்டல் விடுத்ததால் இளம்பெண் தீக்குளிப்பு தந்தை-மகன் கைது

மயிலாடுதுறை அருகே கொலைமிரட்டல் விடுத்ததால் மன முடைந்த இளம்பெண் தீக்குளித்தார். இது குறித்து தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-02-05 22:15 GMT
குத்தாலம்,

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள செங்குடி கீழத்தெருவை சேர்ந்த கண்ணையன் மகள் வசந்தி (வயது 32). இவரது பெற்றோர் முன்பே இறந்துவிட்டனர். சகோதரிக்கும் திருமணமாகி கணவருடன் மயிலாடுதுறை அருகே உள்ள கள்ளிக்காட்டில் வசித்து வருகிறார். இதனால் வசந்தி, தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவர் அசிக்காடு கிராமத்தில் உள்ள ஒரு தையல் கடையில் வேலை பார்த்து வந்தார். அந்த கடையில் வசந்தியின் பக்கத்து வீட்டை சேர்ந்த ஐஸ்வர்யா என்பவரும் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் இருவரையும் வேலைக்கு வரவேண்டாம் என்று தையல் கடையின் உரிமையாளர் கூறி உள்ளார். ஆனால், ஐஸ்வர்யா மட்டும் நேற்று முன்தினம் மீண்டும் வேலையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து வசந்தி, ஐஸ்வர்யாவிடம் எப்படி மீண்டும் வேலைக்கு சேர்ந்தாய்? என்று கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து ஐஸ்வர்யா, தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஐஸ்வர்யாவின் தந்தை வீரமணி (56), அவரது தாய் தவமணி, சகோதரர் சுரேந்தர் (22) ஆகிய 3 பேரும் சேர்ந்து வசந்தியை தாக்கியதோடு, மானபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வசந்தி, நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வசந்தி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பெரம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தனபால் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரமணி, சுரேந்தர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். வழக்கு தொடர்பாக வீரமணியின் மனைவி தவமணியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்