'பெண்களை இழிவுபடுத்துவதை பா.ஜ.க. பொறுத்துக் கொள்ளாது' - அமித்ஷா

பெண்களை இழிவுபடுத்துவதை பா.ஜ.க. ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்தார்.

Update: 2024-04-30 11:04 GMT

கவுகாத்தி,

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எச்.டி. குமாரசாமியின் சகோதரர் எச்.டி.ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்த பிரஜ்வால் ரேவண்ணா, ஹாசன் தொகுதி எம்.பி.யாக பதவி வகித்து வருகிறார். தற்போது நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் அதே தொகுதியில் மீண்டும் அவர் போட்டியிட்டுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் ரேவண்ணா தொடர்புடைய ஆபாச வீடியோக்கள் ஹாசன் நகர் முழுவதும் பரவின. இவற்றில் பல வீடியோக்களை பிரஜ்வாலே தன்னுடைய மொபைல் போனில் பதிவு செய்துள்ளார் என்றும், பல பெண்களை கட்டாயப்படுத்தி வீடியோ காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.

அவருக்கு எதிரான ஆபாச வீடியோ விவகாரம் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ள நிலையில், மதசார்பற்ற ஜனதாதள கட்சியில் இருந்து பிரஜ்வால் ரேவண்ணா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, "ஊடகங்களில் வெளியாகியுள்ள ரேவண்ணா தொடர்பான விவகாரம் மிகவும் வேதனையளிக்கிறது. அதை எந்த வகையிலும் பொறுத்துக்கொள்ள முடியாது. பா.ஜ.க.வின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. பெண்களை இழிவுபடுத்துவதை நாங்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்" என்று தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்