இருதரப்பினர் மோதலால் பரபரப்பு: நெல்லையில், வீடுகளில் வெடிகுண்டு சோதனை போலீசார் குவிப்பு- பதற்றம்

நெல்லையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருதரப்பினர் மோதலால் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, வீடுகளில் போலீசார் வெடிகுண்டு சோதனை நடத்தினர். அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Update: 2019-04-01 22:30 GMT
நெல்லை,

நெல்லை டவுன் பாறையடி பகுதியை சேர்ந்தவர் சுடலைமணி. இவருடைய மகன்கள் சங்கர் (வயது 22), சதீஷ்குமார் (19). அதே பகுதியை சேர்ந்தவர் துரைராஜ் மகன் கவுதம் (19). இவர்கள் 3 பேரும் நேற்று முன்தினம் நள்ளிரவில் கோட்டையடி பகுதியில் பேசிக் கொண்டு இருந்தனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் அங்கு வந்தனர். அவர்கள், இந்த நேரத்தில் இங்கு ஏன் நிற்கிறீர்கள்? என்று கூறினர். இதுதொடர்பாக இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த அந்த இளைஞர்கள் அரிவாளால் சங்கர், சதீஷ்குமார், கவுதம் ஆகிய 3 பேரையும் வெட்டினர்.

பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயம் அடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பாறையடி பகுதியை சேர்ந்தவர்கள் கோட்டையடி பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த 3 கார்கள், 6 மோட்டார் சைக்கிள்கள், 2 ஆட்டோக்களும் அடித்து நொறுக்கப்பட்டன. இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை டவுன் உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார், இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் கோட்டையடி, பாறையடி பகுதிகளுக்கு சென்றனர். அவர்கள், இருதரப்பை சேர்ந்த 10 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, இருதரப்பினரும் வீடுகளில் நாட்டு வெடிகுண்டு மற்றும் பயங்கர ஆயுதங்களை பதுக்கி வைத்து உள்ளார்களா? என நெல்லை டவுன் உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார் தலைமையில் வெடிகுண்டு பிரிவு இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். பாறையடி, கோட்டையடி பகுதிகளில் விடிய, விடிய இந்த சோதனை நடத்தப்பட்டது. ஒவ்வொரு வீடுகளாக சென்று போலீசார் மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டு சோதனை நடத்தினர். அங்கு 4 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதையடுத்து வெடிகுண்டு பிரிவு மோப்பநாய்கள் சேரன், புளூட்டோ, பரணி ஆகியன நேற்று காலை அங்கு வரவழைக்கப்பட்டன. ஒவ்வொரு தெருவாக சென்று மோப்ப நாய் மூலம் போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது சில வீடுகளுக்கு உள்ளேயும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், இந்த சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அங்கு பதற்றம் நீடிப்பதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்