சிவகங்கையில் டீக்கடைக்குள் புகுந்த ஆம்னி பஸ்; 4 பேர் காயம்

சிவகங்கையில் அதிகாலையில் டீக்கடைக்குள் ஆம்னி பஸ் புகுந்ததில், 4 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2019-04-02 22:30 GMT

சிவகங்கை,

இளையான்குடியை அடுத்த சாலைகிராமத்திற்கு சென்னையில் இருந்து ஒரு ஆம்னி பஸ் வந்தது. பஸ்சை பொன்னமராவதியை அடுத்த பொய்யாமலைபட்டியை சேர்ந்த ஜெயபாண்டியன் (வயது 48) என்பவர் ஓட்டி வந்தார். பஸ்சில் 3 பயணிகள் மட்டும் இருந்தனர். சிவகங்கை காஞ்சிரங்கால் அருகே பஸ் வந்த போது எதிர்பாராத விதமாக ரோட்டின் நடுவில் அடுத்தடுத்து இருந்த 2 மின் கம்பங்கள் மீது மோதியது.

அதில் 2 மின்கம்பங்களும் அடியோடு சாய்ந்தன. தொடர்ந்து நிலைதடுமாறிய ஆம்னி பஸ் ரோடு ஓரத்தில் ஜெயக்குமார் என்பவர் நடத்தி வரும் டீக்கடைக்குள் புகுந்தது.

அப்போது கடையில் டீ குடித்து கொண்டிருந்த காஞ்சிரங்காலை சேர்ந்த ஆனந்தன் (50), ஆறுமுகம் (60), மணிமுத்து (55) மற்றும் டீக்கடை உரிமையாளர் ஜெயக்குமார் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

அதில் படுகாயமடைந்த ஆனந்தன், ஆறுமுகம் ஆகியோர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தில் பஸ்சில் வந்த 3 பயணிகளும் காயமின்றி தப்பினர்.

சம்பவத்தை தொடர்ந்து ஆம்னி பஸ் டிரைவர் ஜெயபாண்டியன் தப்பி ஓடிவிட்டார். விபத்தில் டீக்கடை முற்றிலும் சேதமடைந்தது. இதுகுறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்