தேர்தல் பணி குறித்து போலீசார் ஆலோசனை: அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை
அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.ஜி.சுரேந்தர் சிங் யாதவ் எச்சரிக்கை விடுத்தார்.;
புதுச்சேரி,
புதுவை எம்.பி. தேர்தல் மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 18–ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் தேர்தல் துறை தீவிரமாக இறங்கியுள்ளது.
தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப்படையினரும் புதுவை வந்துள்ளனர். தேர்தல் காலகட்டத்தில் போலீசார் ஆற்றவேண்டிய பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்தில் போலீஸ் ஐ.ஜி. சுரேந்தர்சிங் யாதவ் கலந்துகொண்டு போலீசாருக்கு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:–
தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும். குறித்த நேரத்தில் பணிக்கு வந்துவிட வேண்டும். பாகுபாடுகள் பார்க்காமல் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்யவேண்டும். எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஆதரவாக செயல்படக்கூடாது.
அவ்வாறு செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வாக்குப்பதிவு தினத்தன்று யாராவது பிரச்சினை செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கக்கூடாது. வாக்காளர்களுக்கு கொடுக்க மதுபானங்கள், பரிசுப்பொருட்கள் வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்யவேண்டும்.
தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ள துணை ராணுவப்படையினருடன் இணைந்து செயல்பட வேண்டும். தனிப்பட்ட முறையில் யாருக்கும் ஆதரவாக செயல்படக்கூடாது.
இவ்வாறு ஐ.ஜி. சுரேந்தர்சிங் யாதவ் பேசினார்.
கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி தில்லைவேல் பேசும்போது, இந்த தேர்தலில் சுமார் 2 லட்சம் இளம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தேர்தல் அமைதியாக நடைபெற போலீசார் தேர்தல் துறையுடன் இணைந்து பணியாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வா குப்தா பேசும்போது, தேர்தல் பணியின்போது குறைபாடுகள் இருந்தால் தேவைகள் குறித்து தேர்தல் துறையிடம் தெரிவிக்கவேண்டும். மெயின்ரோட்டில் வாக்குச்சாவடிகள் இருக்கும்போது அங்கு போக்குவரத்தை மாற்றியமைக்கும் ஏற்பாடுகளை போலீஸ் அதிகாரிகள் செய்யவேண்டும்.
வாகன சோதனையின்போது பணமோ, பரிசுப்பொருட்களோ சிக்கினால் நீங்களாகவே விடுவிக்கக்கூடாது. அதை தேர்தல் துறையிடம் ஒப்படைக்கவேண்டும். வாக்குப்பதிவுக்கு 2 நாட்களுக்கு முன்பு தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கிறதா? என்பதை உறுதி செய்யவேண்டும் என்று குறிப்பிட்டார்.