நதிநீர் இணைப்பின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர வேண்டும் - விஞ்ஞானி பொன்ராஜ் பேச்சு

நதிநீர் இணைப்பின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர வேண்டும் என்று விஞ்ஞானி பொன்ராஜ் பேசினார்.

Update: 2019-04-09 22:12 GMT

காரைக்குடி,

காரைக்குடி அருகே மானகிரியில் உள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் நிறுவனர் குமரேசன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ரமேஷ் வரவேற்றார். இதில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் விஞ்ஞானி டாக்டர் பொன்ராஜ், அண்ணா பல்கலைக்கழக டீன் டாக்டர் மாலதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் விஞ்ஞானி பொன்ராஜ் தனது சிறப்புரையில் பேசியதாவது:– நமது நாட்டை வல்லரசாக்க வேண்டும் என்ற அப்துல் கலாமின் கனவை நனவாக்கும் வகையில் மாணவர்கள் தங்களின் திறமைகளையும் உழைப்பையும் வழங்க வேண்டும். நதிநீர் இணைப்பு பற்றிய முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து டாக்டர் மாலதி பேசுகையில், மாணவர்கள் தங்களது படிப்பிற்கு முக்கியத்துவம் அளித்து, தாம் விரும்பும் துறையில் உயர் படிப்பு படித்து நாட்டிற்கும் சமூகத்திற்கும் தொண்டாற்ற வேண்டும் என்றார். விழாவில் மாணவ–மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் படிப்பிலும் பல்வேறு போட்டிகளிலும் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாகிகள் சாந்தி குமரேசன், அருண்குமார், ஆசிரியர்கள் மாணவ–மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்