கும்மிடிப்பூண்டி அருகே தேர்தல் பறக்கும் படை ஜீப் மரத்தில் மோதி ஏட்டு பலி அதிகாரி உள்பட 6 பேர் படுகாயம்

கும்மிடிப்பூண்டி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சென்ற ஜீப் சாலையோர மரத்தில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் போலீஸ் ஏட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அதிகாரி உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-04-10 23:00 GMT

கும்மிடிப்பூண்டி,

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் நகை, பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் தலைமையில் பறக்கும் படையினர் ஒரு ஜீப்பில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட பெரியபாளையம் அடுத்த ஆரணியில் இருந்து புதுவாயல் நோக்கி சென்றனர்.

புதுவாயல் கூட்டுச்சாலையின் திருப்பம் அருகே சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்தது.

ஜீப்பில் இருந்தவர்கள் உடனே சத்தம் போட்டனர். அதிகாலை நேரம் என்பதால் அந்தப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லை. விபத்தில் சிக்கியவர்கள் அளித்த தகவலின்பேரில் கவரைப்பேட்டை போலீசாரும், நெடுஞ்சாலைத்துறை போலீஸ் ரோந்து வாகனத்தில் இருந்த போலீசாரும் விரைந்து சென்று ஜீப்பை மீட்டனர்.

பின்னர் அதில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்டனர். ஆனால் ஜீப்பின் அடியில் சிக்கிய போலீஸ் ஏட்டு கோவிந்தசாமி (வயது 55) என்பவர் மட்டும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர், பெரியபாளையம் அடுத்த வெங்கல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

ஊத்துக்கோட்டை அடுத்த தொளவேடு காலனியை சேர்ந்த இவருக்கு லீலாவதி (50) என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். உயிரிழந்த கோவிந்தசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன், போலீஸ்காரர்கள் கமலநாதன்(42), லாசர்(57), பெண் போலீஸ் இந்துமதி மற்றும் ஜீப் டிரைவர் கண்ணன் (48), வீடியோ கேமரா மேன் ஆரணியை சேர்ந்த அஜித் (28) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அனைவரையும் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதில் குணசேகரன், கமலநாதன் மற்றும் லாசர் ஆகியோர் மட்டும் சென்னை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் சிக்கிய கமலநாதன் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்திலும், லாசர் கவரைப்பேட்டை போலீஸ் நிலையத்திலும் பணிபுரிந்து வருகிறார்கள். பெண் போலீஸ் இந்துமதி திருவண்ணாமலை கருங்காலிகுப்பத்தை சேர்ந்தவர் ஆவர்.

தொடர்ந்து இரவு நேரங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்ததால், தூக்கமின்மை காரணமாக டிரைவருக்கு ஏற்பட்ட சோர்வே இந்த விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி ஆகியோர் நேரில் வந்து ஆய்வு நடத்தினர்.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத் மேற்பார்வையில் கும்மிடிப்பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்