பறக்கும்படையினர் பறிமுதல் செய்த ரூ.50¼ லட்சம் திருப்பி ஒப்படைப்பு

தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக வேலூர் மாவட்டத்தில் 13 கோடியே 12 லட்சத்து 16 ஆயிரத்து 35 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் ரூ.50¼ லட்சம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது.

Update: 2019-04-12 22:30 GMT

வேலூர், 

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 18–ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அதைத்தொடர்ந்து வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும்படை, நிலை கண்காணிப்புகுழு அமைக்கப்பட்டது.

அவர்கள் வாகன சோதனை நடத்தி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லப்படும் பணம் மற்றும் நகை, பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அளவுக்கு அதிகமாக பணம் பதுக்கிவைத்திருப்பதாக கிடைக்கும் தகவலின்பேரில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பணத்தை கைப்பற்றி வருகிறார்கள்.

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் காட்பாடி அருகே வீட்டில் பதுக்கிவைத்திருந்த 11 கோடியே 98 லட்சத்து 67 ஆயிரத்து 10 ரூபாயை கைப்பற்றினர்.

அதேபோன்று ஏ.டி.எம். எந்திரங்களில் வைப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.32 லட்சமும் பறிமுதல் செய்யப்பட்டது. இவைத்தவிர பறக்கும் படையினர் ரூ.81 லட்சத்து 49 ஆயிரத்து 340 பறிமுதல் செய்துள்ளனர். இதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் மொத்தம் ரூ.13 கோடியே 12 லட்சத்து 16 ஆயிரத்து 350 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதில் சிலர் பணங்களுக்கு உரிய ஆவணங்களை கொடுத்து பணத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அதன் அடிப்படையில் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த தொகையில் ரூ.50 லட்சத்து 34 ஆயிரத்து 320 திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட பணத்தை தேர்தல் முடியும் வரை திருப்பி ஒப்படைக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பணம், பொருட்களை தேர்தல் முடிவதற்கு முன்பு திருப்பி ஒப்படைத்தால் அந்த பணம் மற்றும் பொருட்கள் மீண்டும் தேர்தலில் பயன்படுத்த வாய்ப்பிருப்பதால் திருப்பி ஒப்படைக்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மற்ற பணங்களுக்கு உரிய ஆவணங்கள் இருந்தாலும் தேர்தலுக்கு பிறகே ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்