சென்னையில் 6 இடங்களில் தபால் ஓட்டுப்பதிவு தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் வாக்களித்தனர்

சென்னையில் 6 இடங்களில் தபால் ஓட்டுகள் பதிவு செய்யப்பட்டன. இதில் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் நேற்று தபால் ஓட்டு போட்டனர்.

Update: 2019-04-13 21:49 GMT
சென்னை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், போலீஸ்காரர்கள் மாவட்ட வாரியாக கடந்த 7-ந்தேதி முதல் தபால் ஓட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள போலீசாரும், அதிகாரிகளும் நேற்று தபால் ஓட்டுகள் போட்டனர். இதற்காக 3,751 போலீசார் விண்ணப்ப படிவம் 12-ஐ பூர்த்தி செய்து ஏற்கனவே வழங்கினர்.

வடசென்னை நாடாளுமன்ற தொகுதி, பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளி, மத்திய சென்னை தொகுதிக்கு எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தென்சென்னை தொகுதிக்கு நந்தனம் அரசு கலைக்கல்லூரி, திருவள்ளூர் தொகுதிக்கு ஆவடி விளிஞ்சம்பாக்கம் காந்திநகர் இமாக்குலேட் ஆர்ட் ஆப் மெரீஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகம், காஞ்சீபுரம் தொகுதிக்கு கானத்தூர் காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி என 6 இடங்கள் தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தபால் ஓட்டுகளை போடலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் எழும்பூர் உள்பட சில மையங்களில் காலதாமதமாக தபால் ஓட்டு பதிவு தொடங்கியது. போலீசாரின் வழக்கமான பணிகள் பாதிக்காத வகையில் அவர்கள் வாக்களிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் நேரம் ஒதுக்கி தந்தனர். போலீசாரும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

ராயபுரம் செயின்ட் பீட்டர்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தபால் ஓட்டு பதிவை சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பார்வையிட்டார். போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்பட போலீஸ் உயர் அதிகாரிகள் தேர்தல் அன்று ஓட்டு போட உள்ளனர்.

மேலும் செய்திகள்