8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவேன் என மத்திய மந்திரி கூறுவது தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்வது போன்றது திருவண்ணாமலையில் டி.டி.வி. தினகரன் பேச்சு

நீதிமன்றமே தடைவிதித்த 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவேன் என மத்திய மந்திரி கூறுவது தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்வது போன்றது என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.

Update: 2019-04-14 22:30 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் ஞானசேகரனை ஆதரித்து டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. நேற்று மாலை திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் திறந்த வாகனத்தில் நின்றபடி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

மதச்சார்பற்ற கூட்டணி என்று தி.மு.க. சார்பில் கூறுகிறார்கள். கடந்த 15 ஆண்டு காலமாக காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆட்சியில் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து மக்களை புறம்தள்ளி தனது குடும்பத்தார் மற்றும் உறவினர்களையே பாதுகாத்தவர்கள் இவர்கள். இவர்களின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தால் காவிரி மேலாண்மை வாரியத்தை கலைத்து விடுவேன் என தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது.

8 வழிச்சாலை திட்டம் தற்போது நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய மந்திரி நிதின் கட்காரி சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதல் -அமைச்சர் முன்னிலையிலேயே விவசாயிகள் ஆலோசனை பெற்று மீண்டும் 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவேன் என கூறும் போது முதல் - அமைச்சர் வாய் மூடி கொண்டு அமர்ந்துள்ளார். இந்த 8 வழிச்சாலையானது 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் நீர் ஆதாரங்களை அழித்து தனியார் நிறுவனத்திற்காக அமைக்கப்படும் சாலை. மத்திய மந்திரி தேர்தல் நேரத்தில் எவ்வளவு தைரியமாக 8 வழிச்சாலையை அமைத்தே தீருவேன் என கூறுகிறார்.

இந்த பகுதி மக்கள் அ.தி.மு.க.விற்கு வாக்களித்தால் இந்த பகுதி விவசாயத்தையும், பசுமையையும் அழித்து விடுவார்கள். இந்த 8 வழிச்சாலை வருவதால் தொழில் வளர்ச்சி பெறும் என சட்டமன்றத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். இந்த 8 வழிச்சாலை திட்டத்தை வரவேற்பதன் மூலம் தி.மு.க., பா.ஜ.க. உடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. 8 வழிச்சாலையை எதிர்த்து அ.ம.மு.க. பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தி உள்ளது. நீதிமன்றமே தடைவிதித்த அந்த 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவேன் என மத்திய மந்திரி கூறுவது தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்வது போன்றது.

ஏற்கனவே ஆர்.கே. நகரில் ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுத்து அ.தி.மு.க.வால் ஆட்சிக்கு வர முடியவில்லை. ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களான நமக்குத்தான் அந்த மக்கள் வெற்றியை தந்தார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்