மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை சிறப்பு பார்வையாளர் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகளை சிறப்பு பார்வையாளர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2019-04-15 23:00 GMT
கிருஷ்ணகிரி, 

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொண்டுள்ள பணிகளை தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குனர் மற்றும் சிறப்பு பார்வையாளர் எம்.எஸ்.சண்முகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான டாக்டர் எஸ்.பிரபாகர், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

முன்னதாக சிறப்பு பார்வையாளர் சண்முகம் கிருஷ்ணகிரி தொகுதிக்குட்பட்ட போகனப்பள்ளி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிருஷ்ணகிரி நகராட்சி உருதுபள்ளி, பழையபேட்டை நகராட்சி அரசு உயர் நிலைப்பள்ளி, வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு மேற்கொள்ளப்படவுள்ள அடிப்படை வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது போகனப்பள்ளி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையையொட்டி உள்ளதால் பள்ளிக்கு செல்ல உள்ள பாதையை மண் அமைத்து சாய்வாக அமைக்க வேண்டும். மேலும் பள்ளியில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சாய்வு தளம் உயரமாக உள்ளதை சற்று சாய்வாக அமைத்து மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியில் எளிதாக வாக்குச்சாவடிகளுக்கு செல்லுமாறு அமைக்க வேண்டும். மேலும் மின்சார வசதி, சுகாதார வளாக வசதி, குடிநீர் வசதி ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து சப்-ஜெயில் ரோடு நகராட்சி உருது நடுநிலைப்பள்ளியில் மற்றும் பழைய பேட்டை நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு நகராட்சி மூலமாக குடிநீர் வசதியை வாக்குப்பதிவு அன்று ஏற்படு்த்திட வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் என்.சி.சி. மற்றும். என்.எஸ்.எஸ் மாணவர்களை கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிட வேண்டும் என நகராட்சி ஆணையரிடம் தெரிவித்தார்.

வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு பள்ளி செல்லும் நுழைவு வாயில் பகுதியில் பாதை கறடு முரடாக உள்ளதால் கான்கிரீட் சாய்வு தளம் உடனடியாக அமைக்க வேண்டும். மேலும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதிகளை மேற்கொள்ள வேண்டும். அதேபோல மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிகளுக்கு செல்லும் வகையில் தேவையான சக்கர நாற்கலிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அலுவலர்களிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின் போது ஊரக வளர்்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜி.கே. லோகேஸ்வரி, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சரவணன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் மகிழ்நன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், தாசில்தார் மிருணாளினி, பொதுபணித்துறை பொறியாளர் வெங்கடேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுந்தரபாஸ்கர் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்