“மதசார்பற்ற ஜனநாயகத்தை காக்க உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்” கனிமொழியை ஆதரித்து வைகோ பிரசாரம்

“மதசார்பற்ற ஜனநாயகத்தை காக்க உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களியுங்கள்” என்று கனிமொழியை ஆதரித்து வைகோ பிரசாரம் செய்தார்.

Update: 2019-04-16 22:00 GMT
கோவில்பட்டி, 

“மதசார்பற்ற ஜனநாயகத்தை காக்க உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களியுங்கள்” என்று கனிமொழியை ஆதரித்து வைகோ பிரசாரம் செய்தார்.

பொதுக்கூட்டம்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி. நேற்று காலையில் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளத்தில் தொடங்கினார். ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்த அவர் மாலையில் கோவில்பட்டியில் பிரசாரத்தை முடித்தார். அங்கு காமராஜர் சிலை முன்பு, கனிமொழியை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசியதாவது:-

மதசார்பின்மையை காக்க முயன்றபோது, வன்முறையாளர்களால் கொல்லப்பட்ட அகமது அத்லக் தாத்ரி, கல்பூர்கி, கோவிந்த் பன்சாரி, நரேந்திர தபோல்கர், கவுரி லங்கேஷ் போன்றோரின் ரத்தம் பா.ஜனதாவுக்கு எதிராக நீதி கேட்கிறது, உதயசூரியனுக்கு வாக்கு கேட்கிறது.

கடந்த 2006 முதல் 2011-ம் ஆண்டு வரையிலும் முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி 6 ஆயிரம் இந்து கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தினார். 27 கோவில்களுக்கு தங்கத்தேரை வழங்கினார். ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்தார். அவர் பகுத்தறிவாளராக இருந்தபோதும், அனைத்து மதங்களையும் சமமாகவே கருதினார்.

இடஒதுக்கீட்டை சிதைக்க...

பயிர் காப்பீட்டு திட்டத்தால் ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற பெரு வணிக நிறுவனங்களே பல ஆயிரம் கோடி ரூபாய் பயன் அடைந்தன. மாறாக விவசாயிகளுக்கு எந்த இழப்பீட்டுத்தொகையும் வழங்கப்படவில்லை. தமிழகத்துக்கு வர இருந்த தொழிற்சாலைகள் அனைத்தும், இங்குள்ள அ.தி.மு.க. அரசு நடத்திய கமிஷன் பேரத்தால், வெளிமாநிலங்களுக்கு சென்று விட்டன. வங்கிகளில் 90 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிய பெருநிறுவன முதலாளிகளுக்கு மத்திய பா.ஜனதா அரசு விசா வழங்கி, அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதற்கு உதவியது.

பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதை ரத்து செய்வோம் என்கின்றனர். இது நெருப்போடு விளையாடுவதற்கு சமம். இதற்கு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு யார் அதிகாரம் தந்தது? நமது நாடு முழுவதும் சமஸ்கிருத மொழியையும், இந்து மதத்தையும் திணித்து, நாட்டை இந்துஸ்தானாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றனர். பல்வேறு சாதிகள், மதங்களை கடந்து சகோதரர்களாக வாழ்கிறவர்கள் இடையே வெறுப்புகளை உமிழ்ந்து பிரித்தாள நினைக்கின்றனர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் போன்ற தலைவர்களால் காக்கப்பட்ட சமூகநீதி இடஒதுக்கீட்டை சிதைக்க முற்படுகின்றனர்.

அரசுக்கு சவுக்கடி

கோவில்களில் கொள்ளை போன சிற்பங்களை திறம்பட மீட்டு வந்த நேர்மையான சிலை தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு எதிராக அ.தி.மு.க. அரசு பல சதி திட்டங்களை தீட்டியது. இந்த வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்ற முயன்றது. ஆனால் ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு ஆகியவை சிலை கடத்தல் வழக்குகளை பொன் மாணிக்கவேல் தான் விசாரிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சவுக்கடி கொடுத்தது. பா.ஜனதாவின் கைக்கூலியாக செயல்பட்ட அ.தி.மு.க. அரசு தூத்துக்குடியில் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 13 பேரின் ரத்தம் நீதி கேட்கிறது. இங்கு வாக்காளர்கள்தான் நீதிபதிகள். பள்ளி மாணவர்கள் தங்களுடைய பெற்றோரிடம், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கவுள்ள தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று மன்றாடுகின்றனர். எனவே மதசார்பற்ற ஜனநாயகத்தை காக்க, தி.மு.க. வேட்பாளர் கனிமொழிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு வைகோ பேசினார். கூட்டத்தில், தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கனிமொழி எம்.பி., வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர்கள் ஆர்.எஸ்.ரமேஷ் (ம.தி.மு.க.), அழகுமுத்து பாண்டியன் (இந்திய கம்யூனிஸ்டு), அர்ச்சுணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), கதிரேசன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சீனிவாசன், தி.மு.க. செய்தி தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ஜோயல், திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்