தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவவீரர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு புறப்பட்டு சென்றனர்

தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடஇருக்கும் முன்னாள் ராணுவவீரர்கள் மற்றும் ஓய்வுபெற்ற போலீசார் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

Update: 2019-04-16 21:30 GMT
வேலூர்,

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் பாதுகாப்பு பணியில் போலீசாருடன் முன்னாள் ராணுவவீரர்கள் மற்றும் ஓய்வுபெற்ற போலீசார் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். வேலூர் மாவட்டத்தில் வேலூர், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி மற்றும் இடைத்தேர்தல் நடக்கும் சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட சுமார் 3 ஆயிரம் முன்னாள் ராணுவ வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

மற்ற மாவட்டங்களை விட வேலூர் மாவட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் அதிக அளவில் இருப்பதால் அவர்களில் சிலர் வெளிமாவட்டங்களுக்கும் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்பட்டு வருகிறார்கள். அதன்படி தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட பெயர் பதிவு செய்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ஓய்வுபெற்ற போலீசாருக்கு எந்தெந்த வாக்குச்சாவடி மையங்களில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து நேற்று தெரிவிக்கப்பட்டது.

இதற்காக அவர்கள் வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கத்திற்கு நேற்று வரவழைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்டீபன், பாலகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் எந்தெந்த வாக்குச்சாவடி மையங்களில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதற்கான ஆணை வழங்கப்பட்டது.

அதைபெற்றுக்கொண்ட முன்னாள் ராணுவவீரர்கள், ஓய்வுபெற்ற போலீசார் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்