கூத்தாநல்லூர் அருகே தனியார் பஸ்-சரக்கு வேன் மோதல்; 3 பேர் படுகாயம்

கூத்தாநல்லூர் அருகே தனியார் பஸ்சும், சரக்கு வேனும் மோதியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-04-17 23:00 GMT
கூத்தாநல்லூர்,

திருவாரூரில் இருந்து மன்னார்குடி நோக்கி நேற்று ஒரு தனியார் பஸ் சென்று கொண்டிருந்தது. கூத்தாநல்லூர் அருகே உள்ள கோரையாறு என்ற இடத்தில் சென்றபோது எதிரே மன்னார்குடியில் இருந்து கூத்தாநல்லூர் நோக்கி வந்த சரக்கு வேனும், தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் சரக்கு வேன் தலைகுப்புற கவிழ்ந்தது. அதன் டிரைவர் பூதமங்கலம் கீழகண்ணுச்சாங்குடியை சேர்ந்த தினேஷ் (வயது24), முருகையன் (40), சிவகுமார்(40) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கவிழ்ந்த சரக்கு வேனில் சிக்கிக்கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறை மாவட்ட அதிகாரி முருகேசன், கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய அதிகாரி பிவேந்திரன், நிலைய போக்குவரத்து அலுவலர் பன்னீர்செல்வம், தீயணைப்பு படை வீரர்கள் சம்பத்குமார், செல்வராஜுலு ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பவம் இடத்துக்கு விரைந்து சென்று சரக்கு வேனில் சிக்கிய தினேஷ், முருகையன், சிவகுமார் ஆகிய 3 பேரையும் மீட்டனர்.

இதையடுத்து 3 பேரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல அதே பகுதியில் வெண்ணாற்றின் கரையோரத்தில் கார் ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்தது. அதில் காருக்குள் சிக்கிய 8 பேரையும் தீயணைப்பு வீரர்கள் காயமின்றி மீட்டனர்.

மேலும் செய்திகள்