தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்

வாக்குப்பதிவு விவரம் வெளியீட்டில் தாமதம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2024-05-07 12:21 GMT

சென்னை,

வாக்குப்பதிவு விவரம் வெளியீட்டில் தாமதம் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது;

இந்தியத் தேர்தல் ஆணையம் 2024 மக்களவைக்கான முதல் 2 கட்டத் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் எண்ணிக்கைத் தரவுகளை 2024 ஏப்ரல் 30 அன்றுதான் வெளியிட்டது. முதல் கட்ட வாக்குப்பதிவின் (19 ஏப்ரல் 2024) தரவுகள் 10 நாட்களுக்குப் பிறகுதான் வெளியிடப்பட்டது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவின் தரவுகள் (26 ஏப்ரல் 2024) 4 நாட்களுக்குப் பிறகுதான் வெளியாயின. வாக்காளர்களின் வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் இவ்வளவு தாமதம் செய்தது ஏன்?

முந்தைய சந்தர்ப்பங்களில், வாக்குப்பதிவு முடிந்த 24 மணி நேரத்திற்குள் வாக்குப்பதிவு விவரங்களை ஆணையம் வெளியிட்டது. இப்போது ஏன் இந்த மாற்றம்? அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் பலமுறை கேள்வி எழுப்பிய போதிலும், தாமதத்தை நியாயப்படுத்துவதற்கான எந்த விளக்கத்தையும் தேர்தல் ஆணையம் வழங்கத் தவறியது ஏன்? நாடு முழுவதும் பதிவான வாக்குகளை சில மணி நேரத்தில் எண்ணி முடிக்க முடியும் என்ற நிலையில், முதல் கட்ட வாக்குப் பதிவு நடந்து 2 வாரங்களுக்கு மேலாகியும் தேர்தல் ஆணையத்தால் வாக்குச்சாவடி வாரியான எண்களை ஏன் கொடுக்க முடியவில்லை?

வெளிப்படையான குளறுபடிகளுக்கான காரணங்களை இந்தியத் தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும் என்று விசிக சார்பில் வலியுறுத்துகிறோம்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்